உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறுமா? 3வது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறுமா? 3வது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா!

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில், ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 3வது டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை வீரர்கள் எதிர்பார்த்தது ஒன்று; நடந்தது ஒன்று.

காரணம், 3வது டெஸ்ட் நடக்கும் இந்தூர் ஹோல்கர் மைதானம் சிகப்பு மண் கொண்டது என்பதால், முதல் இரண்டு நாட்களுக்கு பந்து அதிக பவுன்ஸ் ஆகும் என்று எதிர்பார்த்து, சிறப்பாக ரன்களைக் குவிக்கலாம் என்ற கனவோடு, பேட்டிங்கை தேர்வு செய்து ஆடிய இந்திய அணியின் கனவை தவிடு பொடியாக்கியது அந்த மைதானம்.

பவுலர்கள் வீசிய பந்து பவுன்ஸ் ஆகாமல் கணுக்கால் உயரத்தையே பந்து தாண்டாமல் ஆட்டம் காண்பிக்கவே முதல் இன்னிங்சில் இந்தியா வெறும் 109 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தத்தளித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா இந்த ஈஸியான ஸ்கோரை எடுக்க சற்று சிரமப்பட்டாலும், முதல் இன்னிங்சில் 197 ரன்கள் எடுத்து 96 ரன்கள் முன்னிலை வகித்தது.

அதைத்தொடர்ந்து, 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணியினர், இந்த இன்னிங்ஸ்சை சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஜாரா ரொம்பவே நிதானமாக விளையாடி 59 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 26 ரன்களையும் எடுத்தனர். மற்றபடி ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஜடேஜா என வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் எடுக்காத நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி 96 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில், இன்னும் 78 ரன்கள் எடுத்தாலே இந்த டெஸ்ட்டில் ஜெயித்துவிடலாம் என்ற முனைப்புடன் களத்தில் இறங்கியது.

ஆட்டத்தின் முதல் ஓவரை அஸ்வின் வீச, இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் க்வாஜா அவுட்டாகினார். 2வது பந்திலேயே விக்கெட் வீழ்ந்ததால் சற்று சந்தோஷம் அனைவர் முகத்திலும் தென்பட்டது.

அந்த சந்தோஷம் கொஞ்சநேரம் கூட நீடிக்கவில்லை. டிராவிஸ் ஹெட், மார்னஸ் இருவரும் அடித்து விளையாட ஆரம்பித்தனர். இதையடுத்து, டிராவிஸ் ஹெட் 53 பந்துகளில் 49 ரன்கள், மார்னஸ் 58 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா இந்த டெஸ்டை கைப்பற்றியதன் மூலம் இந்தியா 2 டெஸ்டிலும், ஆஸ்திரேலியா 1 டெஸ்டிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் உள்ளது.

இந்நிலையில் மார்ச் 9ம் தேதி 4வது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதனால் 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com