
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்ந்த பொதுத் துறை நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுக்கு 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான பங்கு ஈவுத்தொகையாக மொத்தம் ரூ.307.22 கோடி முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கப்பட்டன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் இன்று தலைமைச் செயலகத்தில்,தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாடு அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (TNPL) ஆகியவற்றின் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பங்கு ஈவுத்தொகையாக மொத்தம் 307 கோடியே 22 இலட்சத்து 28 ஆயிரத்து 309 ரூபாய்க்கான காசோலைகள் / வரைவோலையை வழங்கினார்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)
தனியார் தொழில் முனைவோருடன் இணைந்து, நடுத்தர மற்றும் பெரிய அளவிளான தொழில்களை மேம்படுத்தவும், கூட்டு முயற்சிகள் வழியாக முதலீட்டை ஈர்த்து, மாநிலத்தை உலகளாவிய தொழில் மையமாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுக்கு, 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான பங்கு ஈவுத்தொகையாக 204 கோடியே 1 இலட்சத்து 19 ஆயிரத்து 409 ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT)
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் மாநிலத்தில் பரவலாக தொழில் பூங்காக்களை உருவாக்கி, நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுக்கு, 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான பங்கு ஈவுத்தொகையாக 75 கோடியே 81 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC)
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாட்டின் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. இக்கழகம், தமிழ்நாடு அரசுக்கு 2022-2023ஆம் நிதியாண்டிற்கான பங்கு ஈவுத் தொகையாக 15 கோடியே 17 இலட்சத்து 61 ஆயிரத்து 400 ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (TNPL)
கரும்பு சக்கையை முக்கிய மூலப்பொருளாகக்கொண்டு, செய்தித்தாள், அச்சு மற்றும் எழுது காகிதம் தயாரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் தற்போது, இருபுறமும் மேற்பூச்சு செய்யப்பட்ட அடுக்கு காகித அட்டை, உயர்ரக காகித உற்பத்தி என படிபடியாக விரிவாக்கங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுக்கு 2022-23 ஆண்டிற்கான பங்கு ஈவுத் தொகையாக 12 கோடியே 22 இலட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கியுள்ளது.