ரெய்டில் பிடிபட்ட 5 டன் ரசாயணப் பழங்கள்! மொத்தமும் குப்பையில் கொட்டுங்கள்.. உணவுப் பாதுகாப்பு அதிகாரியின் அதிரடி உத்தரவு!

ரெய்டில் பிடிபட்ட 5 டன் ரசாயணப் பழங்கள்! மொத்தமும் குப்பையில் கொட்டுங்கள்.. உணவுப் பாதுகாப்பு அதிகாரியின் அதிரடி உத்தரவு!

சென்னை, கோயம்பேடு காய்கறி மற்றும் பழச்சந்தையில் சமீபத்தில் உணவுப்பாதுகாப்பு அதிகாரி சோதனையில் ஈடுபட்ட போது சுமார் 5 டன் மாம்பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் உண்ணக்கூடிய தரத்தில் இல்லை எனக் கண்டறியப்பட்டது. அவற்றில் வெகு சில பழங்களே அழுகிய நிலையில் இருந்தன. மற்றவை பார்ப்பதற்கு நல்ல நிலையிலேயே இருந்த போதும் அவற்றைப் பழுக்கச் செய்வதற்காக வியாபாரிகள் பழங்கள் இருக்கக்கூடிய கூடைகளில் கார்பைடு ரசாயணக் கற்களை நேரடியாகப் பயன்படுத்துவதால் அவை பழங்களாக அல்ல விஷமாகவே கருதப்படக்கூடியவை என உணவுப் பாதுகாப்பு அதிகாரி தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் சோதனையில் ஈடுபட்டு பழக்கூடைகளை சீஸ் செய்த தமது குழுவினரிடம் அவர்;

“இப்போது 3 நாட்களுக்கு ஒருமுறை ரெய்டு நடத்தி, ஒவ்வொரு முறையும் இதிலிருக்கும் ஆபத்துகளைப் பற்றி போதுமான அளவு தெரிவித்தும் கூட சிலர் இப்படி நடந்து கொண்டால் அவர்களைத் திருத்த என்ன செய்யலாம்? உடனடியாக அவர்கள் மீது கேஸ் ஃபைல் செய்து நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். இது மிகவும் ஆபத்தான விஷயம். எப்படிச் சொன்னால் இவர்களுக்குப் புரியும் என்று தெரியவில்லை. தொடர்ந்து இதே தவறுகளைச் செய்கிறார்கள். இதனால், இந்தப் பழங்களை காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடும் பொதுமக்களுக்கு எண்ணற்ற வியாதிகள் வரக்கூடும், முக்கியமாக கேன்சர் வரலாம். இது மோசமான விஷயம். இனிமேல் ஒருநாள் விட்டு ஒருநாள் நாம் இங்கு சர்ப்பிரைஸாகச் சோதனையில் ஈடுபட வேண்டும். இந்த வியாபாரிகள் எங்கிருந்து மொத்தமாக இந்தப் பழங்களை வாங்கி வருகிறார்களோ, அங்கேயே நேரடியாகச் சென்று அவர்களுக்கும் நாம் டிரெய்னிங் கொடுக்க வேண்டும்.

காய்களைப் பழுக்க வைக்க உதவும் என்ரைப் எனப்படும் ரசாயணக் கற்களை பாக்கெட்டைப் பிரிக்காமல் லேசாக அதில் ஒரு துளை மட்டும் இட்டு அதை பெட்டிக்கு இரண்டு கற்கள் என்ற விகிதத்தில் ஒரு சோப்பு டப்பாவில் வைத்து மூடி பெட்டியில் முதல் நாள் இரவு போட்டு வைத்தால் அதில் உள்ள பழங்கள் மெல்ல மெல்லப் பழுக்கும். அதற்கு இரண்டு நாட்களாகும். அது வரை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த வியாபாரிகள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ரசாயணப் பாக்கெட்டுகளைக் கிழித்து அப்படியே நேரடியாக அதை பழப்பெட்டிகளில் கொட்டி விடுகிறார்கள். முதல் நாள் இரவில் அப்படிச் செய்தால் மறுநாள்.. .அதாவது ஒரே நாளில் பழங்கள் பழுத்து விடுகின்றன. இது தவறான வழிமுறை. இப்படிச் செய்யக் கூடாது. இப்படி பழுக்க வைக்கக்கூடிய பழங்களை காசு கொடுத்து வாங்கிச் சென்று சாப்பிடுகிறவர்களின் நிலையை எண்ணிப்

பாருங்கள். காசு கொடுத்து விஷத்தையா வாங்கி சாப்பிடுவது?! இவர்கள் மேல் நிச்சயமாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

எத்தனை முறை கண்டித்துச் சொன்னாலும் சிலர் கேட்பதே இல்லை. சொல்லி விட்டு அப்போது தான் நகர்வோம். பின்னாலேயே ரசாயணக் கற்களை பழப்பெட்டிகளில் போட்டு விடுவார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள், இந்தப் பழங்களில் இருந்து சாம்பிள் கலெக்ட் செய்யுங்கள். இந்த விஷயத்தில் சும்மா யோசித்துக் கொண்டிருக்கக் கூடாது.

எவ்வளவு பழங்கள் வேஸ்ட் என்று பாருங்கள், நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இவ்வளவு பழங்களையும் நாம் இப்போது அழித்துத்தான் ஆக வேண்டும். இவை எதுவுமே உண்ணக்கூடிய தரத்தில் இல்லை. எவ்வளவு காசு வேஸ்ட், மனித உழைப்பு வேஸ்ட், கஷ்டப்பட்டு வளர்த்து, மரத்திலிருந்து பறித்து, அதை இவ்வளவு தூரம் அனுப்பி விற்று எத்தனை பேருடைய உழைப்பு வேஸ்ட்டாகிறது என்று பாருங்கள். எல்லாமே பார்க்க நன்றாகத்தான் இருக்கின்றன. முறையாகப் பழுக்க வைத்திருந்தால் எவ்வளவு நல்ல நல்ல பழங்கள் இவை. இப்போது பாருங்கள் இந்த ரசாயணப் பாக்கெட்டுகளை வைப்பதால் இவை எப்படி உண்ணத்தரமற்றதாக மாறி விட்டன என்று?! மொத்தமும் குப்பையில் தான் கொட்ட வேண்டும்.

இயற்கை முறை VS செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை எப்படி அடையாளம் காண்பது?!

இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் என்றால் அவற்றின் வாசமே காட்டிக் கொடுத்து விடும். மாம்பழம் வாங்கும் போது பொதுமக்கள் அவற்றை முகர்ந்து பார்த்து வாங்க வேண்டும், கார்பைடு வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களில் பழுத்த வாசமே வராது. அத்துடன் பழத்தை நறுக்கி ருசி பார்த்தால் அதில் பழம் சாப்பிட்ட உணர்வே கிட்டாது. புளிப்பு அல்லது புளிப்பும் துவர்ப்பும் கலந்த சவசவத்த ஒருவித சுவையே மிஞ்சும். இதை வைத்து அத்தகைய பழங்களை எளிதில் கண்டறியலாம். ஒருமுறை தெரிந்து விட்டால் பிறகு அது போன்ற பழங்களை அடையாளம் கண்டு அவற்றை வாங்காமல் தவிர்த்து விட வேண்டும்.

அத்துடன் மற்றொரு முறையிலும் நீங்கள் அசலாகப் பழுத்த மாம்பழங்களை அடையாளம் காண முடியும், அது எப்படி என்றால், மாம்பழம் வாங்கியதும் அதை நீங்கள் நீர் நிரம்பிய வாளியில் போடுங்கள். பழம் மூழ்கினால் அது இயற்கையாகப் பழுத்த மாம்பழம். தண்ணீரில் மிதந்தால் அது ரசாயண மாம்பழம்.

வெகு எளிதாகக் கண்டறிய மற்றொரு முறை இருக்கிறது. மாம்பழத்தை கையில் எடுத்துப் பாருங்கள். எப்போதுமே மாம்பழங்கள் கீழ்ப்பகுதியில் இருந்து தான் பழுக்கத் தொடங்கும். பழத்தில் கடைசியாக மஞ்சளாக மாறும் பகுதி காம்புப் பகுதி. ஆனால், செயற்கையாகப் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களில் அப்படியான படிப்படியான மாறுதல்களைக் காண முடியாது. அதில் பழம் முழுவதுமே ஒரே சீராக மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இனிமேல் மாம்பழம் வாங்கச் செல்லும் போதெல்லாம் மேற்சொன்ன முறைகளில் சோதித்து பிறகு நல்ல மாம்பழங்களை வாங்கிச் சாப்பிடுங்கள். சும்மா காசு கொடுத்து விஷத்தை வாங்கிச் சாப்பிட்டு விடாதீர்கள்”

- என்று அந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரி உண்மையைப் பிட்டுப் பிட்டு வைத்தார்.

அவரது கோபம் நியாயமானது. அதை வியாபாரிகள் உணர்வார்களா? அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள், உற்றார், உறவினர்கள் எல்லோரும் இருப்பார்கள் தானே? கோயம்பேட்டில் விற்கப்படும் செயற்கை மாம்பழங்கள் அங்கே சுற்றி, இங்கே சுற்றி உலகின் எந்த மூலையிலும் இருக்கும் அவர்தம் உற்றார் உறவினர்கள் எவருக்கேனும் சாப்பிடக்கிடைத்து விட்டால் அதனால் அவர்களுக்கு ஏதேனும் நோய்நொடிகள் பாதித்து விட்டால் அப்போதும் இப்படித்தான் மெளனமாக அதே தவறைச் செய்து கொண்டு இருப்பார்களா?

கொஞ்சம் யோசியுங்கள் வியாபாரிகளே! என்பதாகவே இருந்தது அதிகாரியின் பேச்சு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com