முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொடர்த்து நன்கொடை அளித்து வரும் பிச்சைக்காரர்!
அரசு நிவாரண நிதிக்கு நன்கொடை அளிப்பதில் பொதுவாக பிச்சைக்காரர்களை தொடர்புபடுத்துவதில்லை. ஆனால் 75 வயதான பூல்பாண்டியன் இதற்கு விதிவிலக்கு. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தொடர்ந்து நன்கொடை வழங்குவதை இவர் தனது வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இதுவரையிலும் பல்வேறு காரணங்களுக்காக சுமார் 50 லட்சத்தை அரசுக்கு நன்கொடையாக வழங்கியவர், . செவ்வாயன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் தனது இறுதிப் பங்களிப்பைச் செலுத்தினார்.
பூல்பாண்டியன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக ரூ.10,000 ஐ வழங்கினார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வயதாகிவிட்டதால் தானம் வழங்குவது இதுவே கடைசி முறையாகும் என்றும், இனி தனது மிச்ச வாழ்க்கையை கோவில்களில் கழிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தனக்காக இனி எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் கழிக்கக்கூடிய வகையிலான வீடு அல்லது ஆசிரமத்தைக் கண்டுபிடிக்க உதவ முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்கிணரை சேர்ந்தவர் பூல்பாண்டியன். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது, கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 80,000 நன்கொடை அளித்ததற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் இவருக்கு "சமூக சேவகர் விருது” அளித்துக் கெளரவித்தார்.
இதுவரை தூத்துக்குடி சாத்தான்குளம் துப்பாக்கிச் சூட்டின் போதும், இலங்கையில், நாடு பொருளாதார மந்தநிலையில் தவித்த போதும் பூல்பாண்டியன் நன்கொடை அளித்துள்ளார். அவரது சமீபத்திய பங்களிப்பு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் கள்ள சாராயம் சாப்பிட்டு இறந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர; கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திருச்சி மற்றும் பல மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர்களின் நல நிதியில் சேர்க்க சிறிது சிறிதாக தம்மால் இயன்ற அளவுக்கு பணம் வழங்கியுள்ளார் பூல்பாண்டியன்.
"நான் மற்றவர்களிடமிருந்து பிச்சை சேகரிக்க ஆரம்பித்தவுடன், நான் விரும்பியதை விட அதிகமாக என்னிடம் உள்ளது என்று நினைத்தேன், அதனால் ஏழைகளுக்கு உதவவும் ஏழைகளுக்கு கல்வி கற்பதற்காகவும் நன்கொடை வழங்க முடிவு செய்தேன்," என்று அவர் கூறினார்.
ஆரம்ப காலங்களில் தூத்துக்குடியில் ஒரு கடையில் வேலைபார்த்து வந்த பூல்பாண்டியன் 1979 ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பம்பாய்க்கு குடிபெயர்ந்ததாகத் தகவல். குழந்தைகள் வளர்ந்து அவரவருக்கான வாழ்க்கையில் செட்டில் ஆனதும் தன் மனைவியுடன் தனியாக வாழ்ந்து வந்த பூல்பாண்டியன், மனைவி இறந்த பிறகு தனியாக வாழ ஆரம்பித்தார். அவ்விதமாக மும்பையில் ஓரிரு ஆண்டுகள் தங்கியிருந்த அவர், பின்னர் 2010-ல் தமிழகத்திற்கு வந்ததாகத் தகவல்.