மூடிய அறைக்குள் சிக்கிக் கொண்ட ஒன்றரை வயது குழந்தை… அச்சுறுத்தும் ஆட்டோமேட்டிக் லாக் கதவுகள்!
சென்னை மடிப்பாக்கத்தில் செவ்வாய் அன்று இரவு மூடிய அறைக்குள் சிக்கிக் கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தையை மீட்க தீயணைப்புத் துறை வீரர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. சுமார் 30 நிமிட போராட்டத்தின் பின் குழந்தையை மீட்டனர்.
மடிப்பாக்கம் எல் ஐ சி நகரைச் சேர்ந்த ஐ டி துறை ஊழியர் ஒருவரின் மகனான ஒன்றரை வயதுக் குழந்தை யுவன் தனது வீட்டின் அறைகளில் ஒன்றில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த வேலையில் விளையாட்டுத் தனமாகவே கதவை இழுத்துத் தள்ளியதில் உள்ளே குழந்தை தனித்திருந்த நிலையில் மூடிக் கொண்டது. அந்தக் கதவு ஆட்டோமேடிக் லாக் வகையைச் சார்ந்தது. அதாவது தானியங்கி கதவு வகையைச் சேர்ந்தது. இதின் உள்ளே இருக்கும் நாப் அழுத்தப்பட்டு விட்டால் பிறகு அதைத் திறப்பது கடினம். சாவி வைத்துத் திறக்கலாம். ஆனால், அகஸ்மாத்தாக சாவியும் உள்ளே மாட்டிக் கொண்டாலோ கதவை உடைத்துத் தான் அந்த அறையைத் திறக்க வேண்டும். இவர்கள் விஷயத்தில் அப்படித்தான் நடந்திருக்கிறது. அறைக்கு உள்ளே தனியாக சிக்கிக் கொண்ட குழந்தையை மீட்கும் வழி அறியாது தவித்த பெற்றோர் உடனே மடிப்பாக்கம் காவல்நிலையத்தின் உதவியை நாடியிருக்கின்றனர். மடிப்பாக்கம் காவல் நிலையம் இதில் வேளச்சேரி தீயணைப்புத் துறை வீரர்களின் உதவியை நாடவே, அவர்கள் மூலமாக அரை மணி நேரப் போராட்டத்தின் பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதூ.
இது மாதிரி விபத்து நேர்வது வழக்கமான ஒன்று தான். உள்ளே மாட்டிக் கொள்வது குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் விவரம் அறியாத குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இம்மாதிரியான ஆட்டோமேடிக் கதவுகளைத் தவிர்த்து விடுவது நல்லது, பாதுகாப்பானது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.