ஆதார் கார்டு இணைப்பு - மின்சார மானியத்திற்கு மட்டுமல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்கத்தொகைக்கும் கட்டாயமாம்!
தமிழ்நாட்டில் இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்கள் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தடாலடி அறிவிப்பு சென்ற ஆண்டு வெளியானது. நவம்பர் 28 ஆம் தேதி முதல் மின்நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் பணி தொடங்கியது. 2022 இறுதிக்குள் முடிக்க வேண்டும என்றார்கள்.
இணைக்காவிட்டால் மானியம் பறிக்கப்படும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி மக்களை பயமுறுத்தினார். பெரும்பாலனவர்கள் ஆதாரை இணைக்காமல் இருந்தனர். சில இடங்களில் கட்டிட உரிமையாளர், குத்தகைதாரர் போன்றோர் வீட்டு உரிமையாளருக்கு தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
பின்னர் கால அவகாசம் பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டது. 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை மின் எண்ணுடன் இணைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்படாது என தமிழ்நாடு மின்சார வாரியமும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றவர், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படாத நிலைக்கு விளக்கம் அளித்தார்.
ஏறக்குறைய 2100 மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை மூலமாக மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை பெற்று வருகிறார்கள். இவர்களில் நிறைய பேர் மனவளர்ச்சி குன்றிய, கடும் ஊனமுற்ற, தொழுநோய் பாதிப்பு, தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண், தேசிய அடையாள அட்டை எண், தொலைபேசி எண் ஆகியவற்றை இணைக்காத நபர்களுக்கு ஜனவரி 2023-க்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
2100 பேரை களஆய்வு செய்து விவரங்களை சேகரிக்கப்படுவதாகவும் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக வங்கி கணக்குடன் ஆதார் எண், தேசிய அடையாள அட்டை எண் ஆகியவற்றை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆதார் கார்டு கட்டாயம் என்பதில் தவறில்லை. தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தாலும் காத்திருந்து சாமானியர்களால் அதை செய்துவிடமுடியும். ஆனால், மாற்றுத் திறனாளிகளை கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று குரல் எழுப்புகிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.