மொத்த சென்னையையும் காட்டும் அண்ணாநகர் கோபுரம் விரைவில் திறப்பு!

மொத்த சென்னையையும் காட்டும் அண்ணாநகர் கோபுரம் விரைவில் திறப்பு!

லைநகர் சென்னையின் ஒட்டுமொத்த அழகையும் ஒரே இடத்தில் இருந்து ரசிக்க வேண்டுமானால் அதற்குத் தகுந்த இடம் அண்ணாநகர் பூங்காவில் அமைந்த உயர்ந்த கோபுரம்தான். இந்த கோபுரம் 1968ம் ஆண்டு வர்த்தகம் மற்றும் தொழில் கண்காட்சிக்காகக் கட்டப்பட்டது. அன்று முதல் அது அண்ணாநகரின் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது. இந்த கோபுரத்தின் மீது ஏறி பார்த்தால் சென்னை நகரின் மொத்த அழகையும் கண்டு ரசிக்கலாம் என்று பலரும் கூறுவர். கடந்த 2011ம் ஆண்டு ஒரு தம்பதி இந்த கோபுரத்தின் மீது இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர். அதனையடுத்து, அந்த கோபுரத்தின் மீது செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, பூட்டியே வைக்கப்பட்டிருந்தது. கோபுரம் பூட்டப்பட்டிருந்தாலும், அங்குள்ள பூங்கா வழக்கம் போல மக்கள் பயன்பாட்டில் இருந்துதான் வந்தது.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் மாமாங்கமாக பூட்டிக்கிடந்த இந்த அண்ணாநகர் உயர் கோபுரம் 138 அடி உயரத்துடன் பன்னிரண்டு தளங்களோடு அமைந்ததாகும். நீண்ட காலம் பூட்டியே இருந்த இந்த உயர் கோபுர புனரமைப்புப் பணி நல்ல வேலைப்பாட்டோடு, பொதுமக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் தயாராகி வருகிறது. முற்றிலும் இரும்பு கம்பிகளால் மூடப்பட்டு பாதுகாப்பாக உள்ள கோபுரத்தின் மேல் பகுதி, வண்ணப்பூச்சு மற்றும் ஓவியங்களோடு புத்தம்புது பொலிவுடன் திகழவிருக்கிறது. இந்த உயர் கோபுரம் திறப்பு குறித்து பேசிய மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர், ‘இன்னும் பத்து நாட்களில் இந்த கோபுரம் திறக்கப்படலாம். ஒட்டுமொத்த சென்னையையும் இங்கிருந்து பார்க்கலாம். ஆனால், அதற்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படவில்லை’ என்று கூறியுள்ளார்.

இருபது வருடங்கள் இந்த கோபுரம் திறக்கப்படவில்லை என்பதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான இளைய சமுதாயத்தினரும், வெளியூரிலிருந்து சென்னையைச் சுற்றிப் பார்க்க வருகை தருபவர்களும் இந்த கோபுரத்தின் மீது இருந்து சென்னையை ரசிக்கும் அனுபவம் கிடைக்கப் பெறாமல் இருந்தனர். ஆனால், அந்த இனிய அனுபவத்தைப் பெற அவர்கள் தற்போது தயாராகி வருகிறார்கள். மேலும், இந்த கோபுரம் திறக்கப்பட்டால் பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com