நாம் தமிழர் கட்சிக்கு வந்த மேலும் ஒரு சிக்கல்!

நாம் தமிழர் கட்சிக்கு வந்த மேலும் ஒரு சிக்கல்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் அனல் பறந்துக் கொண்டிருக்கிறது. நேற்று இரவு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். வீரப்பன்சத்திரத்திலிருந்து கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்றார். காவிரி சாலையில் திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சியினரும் கற்கள், உருட்டுக் கட்டை கொண்டு தாக்கிக்கொண்டார்கள்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனடிபடையில் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி சிவகுமாரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அதில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெறவும், தொடர்ந்து பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேனகா, ஈரோடு கிழக்கு தொகுதியில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி தேவையில்லை. வாய் மொழியாக கூறினால் போதும் என்று தெரிவித்தனர்.

ஆனால் அதையும் மீறி வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கினை ரத்து செய்ய வேண்டும் என்றும், 34 வார்டுகளில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன். இதேபோல் மற்ற அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதி கடிதம் வாங்கி உள்ளார்களா? என கேட்டோம். அதற்கு இரண்டு மணிக்கு மேல் வாங்க எனக் கூறுகின்றனர். அவர்கள் அனுமதி கடிதம் வழங்கவில்லை.

இரண்டு மணிக்கு வாங்க என்று சொல்லும் போதே அவர்கள் இனிமேல் தான் தயார் செய்து கொடுக்கப் போகிறார்கள் எனத் தெரிகிறது.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதேபோல் மக்களுக்கு எல்லா விதமான பரிசுப் பொருட்களையும் வழங்கி வருவது வெளிப்படையாக தெரிகிறது. இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

 இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மக்களை சந்தித்து எங்கள் கொள்கைகளை, பிரச்சாரங்களை கொண்டு செல்லும் என் மீது வீண் வழக்கு எதற்கு? எந்த ஒரு அத்துமீறலையும் செய்யவில்லை. அவர்கள் தான் அத்துமீறியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் என்பதால் ஆளுங்கட்சியினர் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் கொலுசு, வேட்டி, குக்கர் போன்ற பரிசு பொருட்களை வழங்கி வரும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில் அருந்ததியர்கள் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக உரிய விளக்கம் தர வேண்டும் என்று வேட்பாளர் மேனகாவிற்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் நாம் தமிழர் கட்சிக்கு ஈரோடு கிழக்கில் சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com