மெட்ரோ ரயில் வசம், புறநகர் மின்சார ரயில்கள் - மேம்படப் போகும் ரயில் பெட்டிகள்!

மெட்ரோ ரயில் வசம், புறநகர் மின்சார ரயில்கள் - மேம்படப் போகும் ரயில் பெட்டிகள்!

கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சென்னை புறநகர் ரயில்கள், பின்னாளில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சென்னையின் புறநகர் பயணிகள் குறைந்த செலவில், விரைவாக சென்னை மாநகரத்திற்கு வந்து செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதற்கிடையே சென்னை மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால் புறநகர் ரயில்களின் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. மெட்ரோ ரயிலோடு ஒப்பிடும்போது குறைவான கட்டணத் தொகை என்றாலும் மெட்ரோ ரயில் வளாகங்களில் கிடைக்கும் வசதிகள் புறநகர் ரயில் நிலையங்களில் கிடைப்பதில்லை.

தற்போது புறநகர் ரயில்கள் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் தளங்களுக்கு ஏற்றபடி புறநகர் ரயில் நிலையங்களையும் தரம் உயர்த்துவதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. அனைத்து ரயில்களிலும் குளிர்சாதன வசதி செய்யப்படவிருக்கிறது.

புறநகர் ரயில் தடங்களையும், அதில் இணைக்கப்படும் பெட்டிகளை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக புறநகர் ரயில்களின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது. ஒவ்வொரு சீட்டிலும் சார்ஜ்ர் வசதி செய்த தரப்படவேண்டும் என்கிற பயணிகளின் கோரிக்கையும் நிறைவேறவிருக்கிறது.

புறநகர் ரயில்களின் தரம் மேம்படுத்தப்பட்டால் தாம்பரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளிலிருந்து அன்றாடம் சென்னைக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்கிறார்கள். இதற்கிடையே மெட்ரோ ரயில் திட்டமும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கடந்த 2015ல் ஆரம்பிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குள் சென்னை மாநகரத்தின் முக்கியமான போக்குவரத்து வழியாக மாறியிருக்கிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம், முதல் கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரை என இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை, மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை இணைக்கும் அனைத்து பணிகளும் 2025 ஆண்டுக்குள் முடிக்கப்பட்டுவிடும் என்கிறார்கள்.

அடுத்து வரவிருக்கும் 2 ஆண்டுகளில் சென்னையை குறுக்கும் நெடுக்குமாக ரயில் தடங்களால் இணைக்கும் திட்டமாக மாறிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com