ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஏலம் நோட்டீஸ்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஏலம் நோட்டீஸ்.

துரை ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த சவரிமுத்து என்பவர் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராக பணியில் இருந்தபோது, மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலத்தில் இருந்து சாத்தூர் வரை சாலை பணிகளை மேற்கொண்டார். இவர் பணிகளை செய்தபோது தேசிய நெடுஞ்சாலை துறையினர் இவரது ஒப்பந்தத்தை மாற்றி விட்டு வேறொரு ஒப்பந்தக்காரரிடம் பணியை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் சவரிமுத்து செய்த பணிகளுக்காக அவருக்கு மூன்று கோடியே  30 லட்சத்து 40 ஆயிரம் வரை தொகை வரவேண்டி இருந்துள்ளது. இந்தப் பணம்  கிடைக்காத நிலையில் ஒப்பந்தக்காரர் சவரிமுத்து இறந்துவிட்டார். பின் இந்தப் பணத்தைப் பெறும்பொருட்டு அவரது வாரிசுகளான சூசை அம்மாள், ஆல்பர்ட் சேகர் உள்ளிட்ட சிலர் பணத்தை கேட்டு விருதுநகர் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

     இந்த வழக்கில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும்  தேசிய நெடுஞ்சாலை நெல்லைக்கோட்ட என்ஜினியர் உள்பட நான்கு அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர். கடந்த 28-6-2007 அன்று   ரூபாய் 87 லட்சத்து 1200 க்கு வழக்கு தாக்கல் ஆன நாள் முதல் தொகை செலுத்தும் நாள் வரை  6% வட்டியுடன் வழக்கின்  செலவு தொகையும் சேர்த்து செலுத்துமாறு அதிகாரிகளுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

     அதனை எதிர்த்து அரசு தரப்பில் மதுரை ஹைகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்து ரூபாய் 68 லட்சத்து 43 ஆயிரத்தை டெபாசிட் செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டது. அந்த பணத்தில் ரூபாய் 40 லட்சம்தொகையை  சூசை அம்மாளின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிய தொகையை  9% வட்டியுடன் செலுத்த வேண்டும் என கடந்த  26/5/2021 மதுரை ஹைகோர்ட்டும் உத்தரவிட்டது.

   ஹைகோர்ட் உத்தரவின்படி சவரிமுத்து குடும்பத்தி னருக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூபாய்  2 கோடியே 35 லட்சத்து 208  செலுத்தப்பட வேண்டி இருந்ததாக தெரியவருகிறது. ஆனால் இந்த தொகை செலுத்தாத நிலையில் இது தொடர்பாக மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமானந்தகுமார் இது குறித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதன்பின்பும் பணம் செலுத்தப்படாத நிலையில் கலெக்டர் அலுவலக கட்டிடத்தை ஏலம் இட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

      இதனைத் தொடர்ந்து கோர்ட்டு பணியாளர் விருதுநகர் ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் சொத்து ஏல நோட்டீசை ஒட்டினார். அதில் கட்டிடத்தின் மதிப்பு ரூபாய் மூன்று கோடியே 50 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.  இம்மாதம் 31ஆம் தேதி ஏலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே வாகனம் விபத்து வழக்கில் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் கலெக்டரின் காரை ஜப்தி செய்ய நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டு அதன் பின்னர் கோர்ட்டில் முறையிட்டத்தின் பேரில் கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com