ஜமேசா முபின்
ஜமேசா முபின்

கார் சிலிண்டர் விபத்து அல்ல.. தற்கொலைப் படை தாக்குதல்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

 கோயம்புத்தூரில் கடந்த 23-ம் தேதி கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக  அதிகாலை 4 மணிக்கு ஒரு காரிலிருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறி, காரில் இருந்த நபர் பலியானார். இச்சமபவம் குறித்து விசாரிக்க கோவை சென்ற தமிழக டிஜிபி, சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்ததாக தெரிவித்தார்.

 இந்நிலையில் இச்சம்பவம் திட்டமிட்ட தற்கொலைப் படை தாக்குதல் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;

 கோவையில் இச்சம்பவத்தில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நபர் ஜமேசா முபின் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.  

இது தற்செயலான விபத்து அல்ல.. திட்டமிட்ட தற்கொலைப் படை தாக்குதல்! இலங்கையில் முன்பு இதேபோன்று தாக்குதல் நடத்தி  269 பேர் பலியான சம்பவத்தில் ஜமேசா முபினிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு முன்பாக ஜமேசா முபின் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை மாற்றியுள்ளார். அதில் அவர் ‘’என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் முன்பு நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள். என் குற்றங்களை மறந்துவிடுங்கள் என் இறுதி சடங்கில் பங்கு பெறுங்கள், எனக்காக வழிபாடு செய்யுங்கள்’’  என்று பதிவிட்டுள்ளார். சி.சி.டி.வி.யில் அவரது வீட்டில் இருந்து 2 சிலிண்டர்களை நாலைந்து பேர் காரில் ஏற்றும் காட்சி பதிவாகியுள்ளது.

 கார் கேஸ் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் இறந்த பின்னர், அவரது வீட்டில் சோதனை நடத்தி கிட்டத்தட்ட 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்யூஸ் வயர்ஸ், 7 வோல்ட் பேட்டரி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். ஆனால் இந்த விபத்து திட்டமிட்ட தற்கொலை படை தாக்குதல் என்று போலீசார் அறிவிக்க மறுப்பது ஏனென்று தெரியவில்லை.

 -இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com