ஆளுநர் மீது வழக்கு: சென்னை ஹைகோர்ட்டில் இன்று முக்கிய முடிவு!

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு எதிராக லாபம் தரக்கூடிய இரட்டை பதவியில் இருப்பதாகக் கூறி அவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரான கண்ணதாசன் என்பவர் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:

தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி தற்போது  புதுச்சேரியில் உள்ள ஆரோவில் அறக்கட்டளை அமைப்பின் தலைவராகவும் நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு ஆரோவில் அறக்கட்டளை அமைப்பின் சட்டத்தின் கீழ் அதன் தலைவராக பதவி வகித்து வருபவருக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 158 உட்பிரிவு 2-ன் கீழ் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவியில் இருப்பவர், வேறெந்த லாபம் தரக்கூடிய நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி, புதுச்சேரி ஆரோவில் அறக்கட்டளையின் தலைவராக பதவி வகிப்பது விதிகளுக்கு முரணானது. எனவே அவரை ஆளுநர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

-இவ்வாறு கண்ணதாசன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com