தமிழ் மந்திரங்கள் சொல்லி பழநி முருகன் கோயில் குடமுழுக்கு!அமைச்சர் சேகர்பாபு உறுதி!

தமிழ் மந்திரங்கள் சொல்லி பழநி முருகன் கோயில் குடமுழுக்கு!அமைச்சர் சேகர்பாபு உறுதி!

ருள்தரும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகத் திகழ்வது பழநி திருத்தலம். இத்தலத்தில் முருகப்பெருமான் அருள்மிகு தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலின் குடமுழுக்குத் திருவிழா பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு வரும் 23ம் தேதியே யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட உள்ளன.

தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானுக்கு நடைபெறும் இந்தக் குடமுழுக்கு விழாவில் சொல்லப்படும் அனைத்து மந்திரங்களையும் தமிழிலேயே சொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்தன. அதற்காக தெய்வத் தமிழ் பேரவை அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் இன்று பழநியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், தஞ்சை பெருவுடையார் கோயில் மற்றும் கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு விழாக்களில் அது சரியாகப் பின்பற்றப்படவில்லை. இந்தச் சூழலில் பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முற்றிலும் தமிழ் மந்திரம் ஓத நடத்த உத்தரவிட வேண்டும். அதோடு, கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக்கலசம் ஆகிய இடங்களிலும் தமிழ் மந்திரங்கள், சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாகச் சொல்லி அர்ச்சிக்க, தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்’ என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று பழநிக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குடமுழுக்குப் பணிகளை ஆய்வு செய்ததோடு, பழநி முருகன் கோயிலில் 88 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அதில் திருக்கோயில் நிதியின் மூலம் 26 பணிகளும், உபயதாரர்கள் மூலம் 62 பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழா ஆகம விதிகளுக்கு உட்பட்டு தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com