கோவை கொலை சம்பவம்; குற்றவாளிகள் மீது துப்பாக்கிச் சூடு... காவல் ஆணையர் விளக்கம்!!

கோவை கொலை சம்பவம்; குற்றவாளிகள் மீது துப்பாக்கிச் சூடு...   காவல் ஆணையர் விளக்கம்!!

கோவை நீதிமன்றம் அருகே ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தது தொடர்பாக, கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

நேற்று முன்தினம் 13ம் தேதி கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் கோகுல் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற மனோஜ் என்பவருக்கு தலை மற்றும் கையில் கத்தி குத்து விழுந்தது.

கோவை நீதிமன்றத்துக்கு கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த இரண்டு பேரை, முன்விரோதம் காரணமாக ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் கோகுல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மற்றொருவருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பலியான இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு இளைஞரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் மேல் கஞ்சா வழக்கும் உள்ளது. இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி இருவரும் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது, நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரத்தில் இருவரும் டீ குடிக்க வந்துள்ளனர். இவர்களை பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கத்தியால் சரமாறியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் கோகுல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மனோஜ் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இதனை அடுத்து இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரையும் கோத்தகிரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் கோவைக்கு அழைத்து வரும் வழியில் மேட்டுப்பாளையம் அருகே ஜோஸ்வா, கவுதம் ஆகிய இருவர் தப்பியியோட முயற்சித்தனர். அவர்களை போலீசார் இடுப்பு கீழே சுட்டு பிடித்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கோவை ஆணையர், 

நேற்று கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவருடன் வந்த மனோஜ் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.  புலன் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஊட்டி குன்னூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு தனிப்படையினர் குன்னூர் சென்றனர். ஆனால் கொலையாளிகள் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டதாக தெரிந்தது.

பின்பு ஊட்டியில் தங்கி இருப்பதாக தெரிந்து ஊட்டிக்கு சென்று அங்கே பதுங்கி இருந்த இடங்களை சோதனை செய்தபோது அங்கிருந்தும் தப்பி கோத்தகிரியை நோக்கி 4 பைக்குகளில் சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக நீலகிரி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லி, நீலகிரி மாவட்ட காவல்துறையினர் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்து அவர்களை கோத்தகிரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் குற்றவாளிகளை தனிப்படை எஸ்ஐ முத்து இருளப்பன், யூசுப் மற்றும் ஒரு சில காவலர்கள் கோத்தகிரியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி அவர்களை கொண்டு வந்தபோது  மேட்டுப்பாளையம் அருகே திடீரென வாந்தி வருவதாகவும், தலை சுற்றுவதாகவும்,  உடனடியாக இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதன் காரணமாக வாகனத்தை நிறுத்தி அவர்களை இறக்கினோம். உடனடியாக குற்றவாளிகளில் கௌதம்,  ஜோஸ்வா என்ற இரண்டு பேரும் காவலில் இருந்து தப்பித்து ஓடினார்கள்.

அவர்களை காவலர்கள் விரட்டும் போது அங்கே ரோட்டில் இருந்து ஒரு சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு புதரில் பதுக்கி வைத்திருந்த அருவாளை எடுத்து இரண்டு பேரும் காவலர் யூசுப்பை தாக்கியதில் அவர்களுக்கு கையில் ஒரு சிறிய காயம் ஏற்படவும்,  பின்னால் வந்த எஸ்ஐ உடனடியாக எச்சரித்தும்,  அவர்கள்  மேற்கொண்டு காவலரை தாக்குவதை தடுப்பதற்கும்,  கைது செய்வதற்கும்,  தற்காப்புக்கும்,  அவர்களுடைய கால்களில், ஓட முடியாமல் அவர்களை தடுக்க இடுப்புக்கு கீழே சுட்டதில் இருவருக்கும் காலில் காயம்பட்டு,  பின்பு அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

பின்பு அவர்களை உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக கோவை சிஎம்சிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே சிசிடிவி கேமராக்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்த வீடியோக்களின் அடிப்படையில் குற்றவாளிகளின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஏழு பேர் இதுவரைக்கும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.  காயம் அடைந்த கௌதம், ஜோஸ்வா தவிர ஜோஸ்வாவினுடைய சகோதரர் டேனியல் ஹரி என்ற கௌதம், அருண்குமார் என்ற நபர், பரணி சௌந்தர் என்ற நபர், சூர்யா என்ற நபர் ஆக மொத்தம் ஏழு பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.

இந்த ஏழு பேரும் விசாரணைக்கு பின்பு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்கள். காயம் அடைந்தவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com