மொபைல் மூலமாக விளைச்சல் நிலங்களை ஆய்வு செய்து, விளைச்சல் நிலத்தின் அளவு, பயிரிடப்பட்டுள்ள பயிரின் தன்மை, தற்போதைய நிலை போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலமாக தமிழகம் முழுவதும் உள்ள 110 கிராமங்களில் அமலுக்கு கொண்டு வரப்பட்டு, பயிர் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
விளைச்சல் நிலங்களை மொபைல் மூலமாக சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். இவை அனைத்தும் அடங்கல் பதிவேட்டில் உடனுக்குடன் பதிவு செய்யப்படும். எந்த இடத்தில் இருந்தாலும் இணையத்தின் மூலம் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மே 25 முதல் ஜீன் 15 வரை மேற்கொள்ளப்படவிருக்கும் இத்தகைய ஆய்வு, மத்திய அரசின் அக்ரிஸ்டாக் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் விவசாய நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டவை இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். இதில் கிடைக்கும் தகவல்களைப் பொறுத்து, இன்னும் பல கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
பயிர்த் தொழிலை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் முதல்படி இது. ஒருவேளை வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால் கிராம நிர்வாக அலுவலருக்கு அடங்கல் டேட்டாவை பூர்த்தி செய்வது எளிதாக இருக்கும். டேட்டாவை விவசாயிகள் எளிதாக பார்க்க முடியும். டேட்டாவை சரி செய்யவும், எளிதாக திருத்த செய்யவும் முடியும்.
திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுதில் நிறைய தடைக்கல்களும் உண்டு. ஊருக்கு வெளியே இணைய இணைப்பு என்பது சீராக இருக்க வாய்ப்புகள் குறைவு. சிக்னல் கிடைக்காதபோது அங்கிருந்து தகவல்களை பெறுவது எளிதல்ல.
தமிழ் நிலம் என்னும் வருவாய்த்துறையின் டேட்டாபேஸை அடிப்படையாக வைத்து ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிரைன்ஸ் என்னும் விவசாய இடுபொருள்களுக்கான இணையத்தளத்திலிருந்து டேட்டா பெறப்படுகிறது.
விளைச்சல் நிலங்களில் எத்தனை நிலங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. எந்தெந்த நிலங்கள் தரிசு நிலங்களாக விடப்பட்டுள்ளன. எங்கே, என்ன விதமான பயிர்கள் விளைச்சலில் இருக்கின்றன போன்ற தகவல்களை உடனடியாக சேகரித்து அதன் மூலம் அரசு உடனுக்குடன் கொள்கை முடிவுகளை எடுக்க முடியும்.
முதலில் எவையெல்லாம் விளைச்சல் நிலங்கள், எவையெல்லாம் தரிசு நிலங்கள் என்பதை வகைப்படுத்தி பதிவு செய்யப்படவேண்டும். தரிசு நிலங்களை குறைத்து
விளைச்சல் நிலங்களை அதிகரிப்பது குறித்து வேளாண் பட்ஜெட்டில் பல திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்கு முன்னதாக இது போன்ற ஆய்வுகளை செய்து முடித்தாக வேண்டும்.
இது தவிர விவசாய நிலங்களை அடமானம் வைத்து வாங்கப்படும் கடன்கள், பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் போன்ற விஷயங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை சரியானவர்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்யவும் இத்தகைய ஆய்வுகள் உதவிகரமாக இருக்கும்.
தமிழக அரசு வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட் அறிவித்துள்ளது. இனி வேளாண்துறையை டிஜிட்டல் மயமாக்குவது தவிர்க்க முடியாதது. அதைத நோக்கிய பயணத்தில் இது முதல் படியாக இருக்கும் என்கிறார்கள்.