தக்ஷிணசித்ரா விருது - நாட்டுப்புற கலைஞர்களுக்கு கௌரவம்!

தக்ஷிணசித்ரா விருது - நாட்டுப்புற கலைஞர்களுக்கு கௌரவம்!

நீலகிரி மாவட்டம், படகர் சமூகத்தைச் சேர்ந்த கிராமியக் கலைஞர் ராமதாஸ் காரி அவர்களுக்கும், ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த நாட்டியக்  கலைஞர் அன்னபத்துலா லக்ஷ்மி மங்கா தாயாரு அவர்களுக்கும் புகழ் மிக்க ‘தக்ஷிணசித்ரா விருது 2023’  சனிக்கிழமை, மார்ச் 11 ஆம் தேதி அன்று மெட்ராஸ் க்ராஃப்ட்  அறக்கட்டளையால் வழங்கப்பட்டது. 

சென்னை புறநகர் பகுதியான முட்டுக்காடில் அமைந்திருக்கும் ‘தக்ஷிணசித்ரா பாரம்பரிய அருங்காட்சியகம்’ ஒரு தொடர்ச்சியான கலாச்சார பயணம். இது தென்னிந்தியாவின் கலை, கைவினை, கட்டிடக்கலை மற்றும் நாட்டுப்புற கலைகளை மேம்படுத்துவதற்காக  1984 இல் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனமான மெட்ராஸ் கிராஃப்ட் அறக்கட்டளையின்  (MCF) முக்கிய திட்டமாகும். 

ஒவ்வொரு ஆண்டும் ‘மெட்ராஸ் கிராஃப்ட் அறக்கட்டளை’ மற்றும்  ‘தக்ஷிணசித்ராவின் நண்பர்கள்’ என்ற தன்னார்வலர் குழுவும்  இணைந்து நாட்டுப்புற கலைகளில் வாழ்நாள் சாதனை படைத்த கலைஞர்களுக்கு 'தக்ஷிணசித்ரா விருது' என்ற மதிப்புமிக்க விருதை வழங்குகிறது. 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருது கடந்த 19 ஆண்டுகளில் அறியப்படாத  பல கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இந்த ஆண்டு, அதன் 20வது பதிப்பில், பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞரான கலைமாமணி உமா முரளி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்பித்துள்ளார். 

மெட்ராஸ் கிராஃப்ட் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் டெபோரா தியாகராஜன் அவர்களும், ‘தக்ஷிணசித்ரா நண்பர்கள்’ குழுவினரும் இணைந்து சிறப்பு கேடையமும், ரூபாய் 50,000  பரிசுத்தொகையும் வழங்கி கலைஞர்களை கவுரவித்துள்ளனர். 

ஸ்ரீ ராமதாஸ் காரி அவர்கள் நீலகிரி மாவட்டம் திம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். அவர்  படகர்  கலாச்சாரம் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட “பெட்டதராஜா கலைக் குழுவின்” முன்னணி கலைஞர் மற்றும் தலைவர். 

இந்த ஆண்டுக்கான தக்ஷிணசித்ரா விருதை பெற்ற இரண்டாவது நபர் மும்மிடிவாரத்தைச் சேர்ந்த அன்னபத்துலா  லக்ஷ்மி மங்கா தாயாரு. அவர் "கலாவண்டுலு நிருத்யம்" என்றும் அழைக்கப்படும் ஆந்திர நாட்டிய நடனப் பாணியைப் பின்பற்றும் பாரம்பரிய நடனக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இக்கலை  ஆந்திர கடலோரப் பிரதேசத்தில் வாழ்ந்த  தேவதாசி குடும்பங்களின் பாரம்பரிய நடனக் கலை.  இவரது முன்னோர்கள் மும்மிடிவாரத்தில் உள்ள "ஸ்ரீ உமா சுரேஸ்வரசுவாமி வாரு " கோயிலில் பரம்பரையாக நடனம் புரிந்து வந்தனர். இவரது அரங்கேற்றமும் அங்கே தான் அரங்கேறியது.  தன் சமூகத்தின் கலை வடிவம்  தன்னுடன் அழிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தன் வாழ்க்கையை கலாவண்டுலு நிருத்யத்திற்காக இவர் அற்பணித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com