42 வருடங்களுக்குப் பின் பெற்றோரைத் தேடும் டென்மார்க் தத்துப்பெண்.கிடைப்பார்களா?

42 வருடங்களுக்குப் பின் பெற்றோரைத் தேடும் டென்மார்க் தத்துப்பெண்.கிடைப்பார்களா?

குழந்தை இல்லாதவர்கள் தத்து எடுப்பதும் அதிக குழந்தைகள் இருந்து அல்லது வறுமை காரணமாக பெற்றோரின் ஒப்புதலுடன் தத்துத் தருவதும் அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை நடைமுறையில் உள்ளது. அப்படி தமிழகத்திலிருந்து வெளிநாடான டென்மார்க்குக்கு  மூன்று வயதில் தத்து கொடுக்கப்பட்ட பெண் தன பெற்றோரையும் பிறந்த மண்ணையும் மறவாமல் 42 ஆண்டுகளுக்கு பிறகு டென்மார்க்கிலிருந்து பெற்றோரைத் தேடி இங்கு வருவது ஆச்சர்யமான விஷயம்.

டென்மார்க் பிலாங்சர் டார்பன் பகுதியை சேர்ந்தவர் பேட்ரிக். வயது 45 . இவரது மனைவி நிஷா வயது 44. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நிஷா கடத்த 1980 ஆம் ஆண்டு மூன்று வயது குழந்தையாக இருந்தபோதே சென்னை பல்லாவரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் குழந்தைகள் காப்பகத்தில் விடப் பட்டுள்ளார். பின்னர் அங்கு இருந்து டென்மார்க்கை சேர்ந்த சுற்றுலா பயணி ராஜ்முஷன் என்பவரால் தத்துக்கு எடுக்கப்பட்டு  டென்மார்க் சென்று அங்கு  வளர்ந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென தனது பெற்றோர் மற்றும் உறவினர்களைக் காண வேண்டும் என்று நிஷாவுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதை கணவரிடம் தெரிவித் துள்ளார். அவரும் சரி என்று கூறவே நிஷாவும் அவரது கணவர் பேட்டரிக்கும் டென்மார்க்கில் இருந்து இந்தியா வந்துள்ளனர். பூனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் அஞ்சலி பவார் என்பவரின் உதவியுடன் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனது பெற்றோரை நிஷா தேடி உள்ளார். அவர் விழுப்புரம் தஞ்சை கும்பகோணம் ஆகிய பகுதிகளில் தேடி அலைந்து விட்டு தற்போது சேலம் மாவட்டம் கருப்பூருக்கு வந்துள்ளார். 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ள நிஷா தற்போது கருப்பூர் பகுதியில் தனது பெற்றோரையும்  உறவினர்களையும்   தனது கணவருடன் தேடி வருகிறார்.

இது குறித்து நிஷா கூறுகையில் “42 ஆண்டுக்கு முன்பு எனது பெயர் மீனாட்சி என்ற ஞாபகம் உள்ளது. பூர்வீகம் கபூர் அல்லது கருப்பூர் என்று மட்டுமே  தெரிகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சென்று  தேடி வருகிறேன். மேலும் கருப்பூர் பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சென்று எனது இளம் வயது ஞாபகங்கள் ஏதேனும் வருகிறதா என தேடினேன். ஆனால் பல இடங்களில் தேடியும் எனது பெற்றோர் உறவினர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் எப்படியாவது தேடிக் கண்டு பிடித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தொடர்ந்து நிஷா தனது கணவருடன் கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து  அங்கிருந்த  இன்ஸ்பெக்டர் ராஜா அவர்களிடமும் விபரங்களைத் தெரிவித்து சென்றார்.

நிஷாவுக்கு அவரது பெற்றோர் கிடைப்பார்களா? ஆவலுடன் இருக்கும் அவருடன் நாமும் காத்திருப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com