குடித்து விட்டு மொட்டை வெயிலில் சாலையில் படுத்து ரகளை செய்த பெண்!

குடித்து விட்டு மொட்டை வெயிலில் சாலையில் படுத்து ரகளை செய்த பெண்!

கோடை வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இளம்பெண்ணொருவர் மத்தியான வெயிலில் தார்ச்சாலையில் மல்லாக்கப் படுத்து போக்குவரத்துக்கு ஊறு விளைவித்திருக்கிறார். சம்பவம் நடந்த இடம் பொள்ளாச்சி, சம்பவத்துக்கு காரணமானவர் திருப்பூர், கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் எனும் பெண்.

மகேஷ் தனது கணவரை இழந்து விட்ட காரணத்தால் போதைக்கு அடிமையாகி விட்டார் என்று கூறப்படுகிறது. கணவரின் இழப்பைத் தாங்க முடியாது மது போதைக்கு அடிமையான மகேஷ் திருப்பூரில் இருந்து பொள்ளாச்சிக்கு ஏன் வந்தார்? என்று தெரியவில்லை. வந்தவர், வந்த காரியத்தைப் பார்க்காமல் பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி மூக்கு முட்டக் குடித்திருக்கிறார்.

குடித்து விட்டு சும்மா இருந்தால் எப்படி? உச்சி வெயில் சுட்டெரிப்பது கூட உரைக்காமல் தார்ச்சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அவரைச் சுற்றித் திரண்டு விட்ட போலிஸாரும், பொதுமக்களும் மகேஷை அங்கிருந்து எழுந்து செல்ல வற்புறுத்தவே, அங்கிருந்து செல்வது போல எழுந்தவர் அடுத்தபடியாக போக்குவரத்தை சரி செய்யப்போகிறேன் என்று சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை மறிக்கத் தொடங்கி இருக்கிறார். அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றினை ஓடிச்சென்று நிறுத்த முயன்ற முட்டாள்தனத்தை அவர் செய்ய ஓட்டுநர் அவசரமாக பிரேக் அடித்து வண்டியை நிறுத்தியதால் மட்டுமே மகேஷ் அந்த வண்டியில் சிக்கி பலியாகாமல் தப்பினார்.

குடித்து விட்டு நிறை போதையில் பேருந்துகளை மறித்து மகேஷ் செய்து கொண்டிருந்த இந்த கோமாளித்தனங்களைப் பார்த்து கரிசனம் கொண்ட காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், பாப்பா, வெளியில் வாம்மா என்று அழைக்க, அவரோ அடுத்ததாக சாலை நடுவில் மொட்டை வெயிலில் டான்ஸ் ஆடத் தொடங்கி இருக்கிறார். இப்படி அடுத்தடுத்து போக்குவரத்துக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருந்த மகேஷை ஒருவழியாகப் பிடித்து சமாதானப்படுத்தி சாலையோரம் உட்கார வைத்திருக்கின்றனர்.

குடித்து விட்டு மகேஷ் செய்த ரகளைகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்ற பொதுமக்களில் பலர், இவ்வளவு போதை ஏறும் அளவுக்கு அப்படி என்ன பிராண்டு சரக்கை இந்தப் பெண் அருந்தி இருப்பார்? என்றும், குடிக்கு அடிமையானா இப்படித்தான் அவமானப்படனும் என்றும் கமெண்ட் அடித்துக் கொண்டு கடந்து சென்றனர்.

இந்த செய்தி வீடியோவை யூடியூபில் வெளியிட்டிருந்த காட்சி ஊடக வர்ணனையாளர் குடித்து விட்டு சாலையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை

சூரியனுக்கே டஃப் கொடுத்த குடிகார மகள், சரக்கு சரோஜா, மப்பு மந்தாகினி, சரக்கு வண்டி, குடிகார பாப்பா என்றெல்லாம் படு காமெடியாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த வர்ணனை சிரிப்பு மூட்டுவதாக இருந்தாலும் வாழ்க்கைத் துணையை இழந்து விட்டு ஆண் ஒருவர் இதே விதமான செயலில் ஈடுபட்டிருந்தார் எனில் சிறு பரிதாபத்துடன் அதை சர்வசாதரணமாகக் கடந்து செல்லும் இந்தச் சமூகம் அதையே பெண் ஒருவர் செய்யும் போது மேற்கண்ட பட்டப் பெயர்கள் எல்லாம் அளித்து எதிர்காலத்தில் ஏதேனும் ஒருநாள் இதற்காக அவர் பெருங்கவலை கொள்ளுமாறு செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று தான் தெரியவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com