ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அ.தி.மு.க கூட்டணி சார்பில் பிரச்சாரக்கூட்டம்! வருகிற 9 ஆம் தேதி அவர் வருவாரா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அ.தி.மு.க கூட்டணி சார்பில் பிரச்சாரக்கூட்டம்! வருகிற 9 ஆம் தேதி அவர் வருவாரா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. இன்று வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைத்திருப்பதால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை உச்சநீதிமன்ற தலையீட்டால் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் அணி தனது வேட்பாளரை திரும்ப பெற்றிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

நேற்று அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்களை டெல்லியில் சமர்ப்பித்து விட்டு, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க வழக்கறிஞர் இன்பதுரை ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா வழி நடத்தியதால் இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்கள்.

இது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலருக்கு டெல்லி தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருக்கிறது. அதில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஏ, பி படிவத்தில் கையெழுத்திட்டு வழங்கும் அதிகாரம் அவைத்தலைவரான தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகிற 9-ந்தேதி அன்று ஈரோட்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை ரோடு முத்து மஹால் அருகே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ம.க ஏற்கனவே தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்திருப்பதால் பா.ம.க சார்பில் யாரும் கலந்து கொள்ளப்போவதில்லை. அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளாராக இருக்கும் ஓ.பி.எஸ் வருவாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓ.பி.எஸ் வரமாட்டார். இனி எடப்பாடியும் பன்னீர் செல்வமும் நேரில் சந்திக்க வாய்ப்பில்லை என்றார். பார்க்கலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com