ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழக காங்கிரசின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனான திருமகன் ஈ.வே.ரா.  கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார். அவருக்கு வயது 46.

இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக ஜனவரி 4ம் தேதி திருமகன் ஈ.வே.ரா. உயிரிழந்தார். இதனால் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஈரோடு கிழக்கு தொகுதி  காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் அறிவித்தார்.

ஆகவே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதியை டெல்லியில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   

வருகிற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார்.

எந்த தொகுதி காலி என்று அறிவிக்கப்படுகிறதோ அந்த நாளில் இருந்து அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. தேர்தல் செலவினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பெரிய தேர்தல்களுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும். ஆனால், அடுத்த 6 மாதங்களுக்கு தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலும் நடக்க வாய்ப்பில்லை என்பதால் மற்ற மாநிலத் தேர்தல்களுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில்,  ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் எனவும், பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும், பிப்ரவரி 8ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் எனவும், பிப்ரவரி 10ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெற இறுதி நாள் எனவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதேபோல், வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலத்திற்கு பிப்ரவரி 27ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் பதிவான வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com