ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : என்ன செய்யப் போகிறார், ஓ.பி.எஸ்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : என்ன செய்யப் போகிறார், ஓ.பி.எஸ்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பால் அ.தி.மு.கவின் தலைமைப்போட்டி அடுத்து ரவுண்டை நோக்கி நகர்ந்திருக்கிறது. இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து தரப்பினருடனும் இணைந்து அ.தி.மு.க சார்பில் போட்டியிடப்போவதாக ஓ.பி.எஸ் அறிவித்திருக்கிறார். இது குறித்து சசிகலா தரப்புடன் பேசவும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க சார்பில் (அதாவது ஓ.பி.எஸ் அணி சார்பில்) ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போகிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்திருந்த அனைத்து கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர்களையும் அணுகி, ஆதரவு கோரப்படும் என்றார். ஆனால், சமீபத்தில் எந்தவொரு கூட்டணிக் கட்சித் தலைவரையும் அவர் சந்தித்தாக ஞாபகமில்லை என்கிறார்கள், அ.தி.மு.கவினர்.

பா.ஜ.க தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்போம். பா.ஜ.க போட்டியிடுவதாக முடிவு செய்தால், அவர்களுக்கு ஆதரவு தருவோம் என்கிறார். எடப்பாடி தரப்பு, அண்ணாமலையை சந்திக்கவிருப்பதாக வந்த செய்திகளை தொடர்ந்து இப்படியொரு அறிவிப்பு ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து வெளியாகியிருக்கிறது. ஆக, கூடிய விரைவில் ஓ.பி.எஸ் டெல்லிக்கு செல்வார் என்று தெரிகிறது.

எடப்பாடியை எதிர்க்க வேண்டும் என்கிற கட்டாயத்தால்தான் நானும் ரெடி என்று ஓ.பி.எஸ், கொங்கு மண்டலத்தில் களமிறங்க தயாராகிறார். அவர் நிஜமாகவே களத்தில் இறங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள்.

ஒ.பி.எஸ்ஸின் தடாலடி அறிவிப்பை பா.ஜ.க ரசிக்குமோ என்பது தெரியவில்லை. சக கூட்டணிக் கட்சிகளை சந்தித்து அதற்கு பின்னர் அறிவிப்பு வெளியிட்டிருந்தால் கூட இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளலாம். தன்னிச்சையாக தன்னுடைய ஆதரவாளர்களை மட்டும் கூட்டி வைத்து ஆலோசனை செய்தபின்னர் அறிவிப்பு வெளியிடுவதை எப்படி எடுத்துக் கொள்வது என்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி, தேசியக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. ஒருவேளை பா.ஜ.க அல்லது வேறு கூட்டணிக் கட்சிகள் கேட்டாலும் அவர்களுக்கு ஆதரவு தருவோம் என்கிறார், ஒ.பி.ஸ். இது குழப்பதை அதிகரித்திருக்கிறது. யார் கேட்டாலும் விட்டுத் தருவோம் என்று அறிவித்ததில் தொடங்கி, ஓ.பி.எஸ்ஸின் நோக்கம் வேறு என்பதை புரிந்து கொள்ளலாம்.

இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது ஓ.பி.எஸ்ஸின் நோக்கமாக இருக்க வாய்ப்பில்லை. இடைத்தேர்தல் வாய்ப்பை பயன்படுத்தி தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொள்வது அவரது எண்ணமாக இருக்கலாம். எடப்பாடி தன்னை மீண்டும் ஏற்றுக்கொண்டால் தன்னால் சசிகலாவோடும் பேசி, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அ.தி.முகவை உருவாக்கமுடியும் என்கிற சிக்னலை மட்டும் அனுப்பியிருப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

அ.தி.மு.கவில் குழப்பத்தை நான் உருவாக்கவில்லை, ஈ.பி.எஸ் தரப்புதான் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது என்கிறார், ஓ.பி.எஸ். ஆக மொத்தம் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணத்தை விட, அ.தி.மு.கவின் உள்கட்சி பிரச்னையில் வெற்றிபெற வேண்டும் என்கிற நெருக்கடியில்தான் இருதரப்பும் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com