ஆன்லைன் மோசடியில் சிக்கி லட்சக்கணக்கான பணத்தை இழந்த பட்டதாரி!

ஆன்லைன் மோசடியில் சிக்கி லட்சக்கணக்கான பணத்தை இழந்த பட்டதாரி!

எத்தனைமுறை எச்சரித்தாலும் அருகில் உள்ளவர்களை நம்பாமல் கண்ணுக்குத் தெரியாத கைகளில் உள்ள அலைபேசியில் ஆராய்ச்சி செய்து ஆன்லைன் மோசடி நபர்களிடம் சிக்கி சற்றும் யோசிக்காமல்  பணத்தை இழந்தபின் வருந்துவது இன்றைய இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. சேலத்தில் இது போன்ற மோசடியில் சிக்கிய இளைஞர் பற்றிய செய்திதான் இது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் பட்டப்படிப்பு படித்த எஞ்சினியர். இவர் தன்னிடமிருந்த 65 ஆயிரம் மதிப்பிலான சுவிட்சர்லாந்து மாடல் கைக்கடிகாரத்தை விற்பனை செய்ய தனியார் விளம்பர ஆன்லைனில் பதிவு செய்தார் அதைப் பார்த்த மர்ம நபர் ஒருவர் கடந்த மாதம் தினேஷ்குமாரை தொடர்பு கொண்டு கைக்கடிகாரத்தை ரூபாய் 48,000 தந்து வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் அவர் தினேஷ்குமார் இடம் பேசும்போது “நான் அமெரிக்கா ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறேன் இந்தியாவில் இருந்து ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் அதற்காக சேவை வரி வர்த்தக கட்டணம் உள்பட பல வகைகளில் பணம் செலுத்த வேண்டி உள்ளது. மேலும் அந்த பணம் அனைத்தும் திரும்ப ஒப்படைக்க கூடியதே. எனவே அந்த பணத்தை மட்டும் நீங்கள் செலுத்துங்கள். மீண்டும் உங்கள் வங்கி கணக்குக்கு அந்த பணம் வந்து சேர்ந்துவிடும்” என்று கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய தினேஷ் குமார் எப்படியாவது கைக்கடிகாரத்தை விற்க வேண்டும் என மர்ம நபர் கூறியபடி பல்வேறு தவணைகளாக ரூபாய் 5 லட்சத்து 60 ஆயிரம் வரை இரண்டு வங்கி கணக்குகளுக்கு செலுத்தியுள்ளார். ஓரிரு நாட்களில் கைக்கடிகாரத்தை வாங்குவதாக கூறிய மர்மநபரை அதன்பின் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தினேஷ்குமார் உணர்ந்தார். உடனே  இது குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் கைலாசம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளனர். தினேஷ்குமார் தொகைகளை செலுத்திய வங்கிகள் குறித்தும் அந்த வங்கிக்கணக்கு யாருடையது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பலவகையான முறைகளில் பண மோசடிகள் நடந்து கொண்டே உள்ளது .அதில் ஒன்றுதான் இது போன்ற ஆன்லைன் வர்த்தக பரிமாற்ற தளங்களில் உள்ள தகவல்களை அறிந்து அவர்களுக்கு வலை விரிக்கும் மோசடியும். ஆகவே ஆன்லைன் வர்த்தகம் மற்றும் இதர தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு மக்கள் பதில் அளிக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் எச்சரிக்கை செய்துள்ளது.                    

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com