கொரோனாவுக்கு பின் மாரடைப்பா? அமைச்சர் மா. சுப்ரமணியன் சொல்லும் ஆலோசனை.

கொரோனாவுக்கு பின் மாரடைப்பா? 
அமைச்சர் மா. சுப்ரமணியன் சொல்லும் ஆலோசனை.

கொரோனாவுக்குப் பின்னர் மாரடைப்பு ஏற்படும் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு சென்றவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுவது அதிகரித்து உள்ளன. இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தாலும், இதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வுக்கு பிறகு இது குறித்து முழுமையான தகவல் தெரியவரும் என்றும், இருப்பினும் தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகள் செய்வதால் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க உபயோகமாக இருக்கும். 

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரிலக்கத்தில் மட்டுமே உள்ளது. நேற்றைய தினம் 4000 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஆறு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கொஞ்சம் ஆறுதலான விஷயம். ஒமைக்ரான் உருமாற்றம் உலகம் முழுவதும் பரவிக் கொண்டு இருக்கிறது. சென்னை, மதுரை, கோவை, நெல்லை போன்ற விமான நிலையங்களில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் 100% பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். 

ஒரே பகுதியில் நிறைய நபர்களுக்கு பாதிப்பு இருந்தால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட தடைசெய்யப்படும். மேலும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாஸ்க் போட வேண்டும் என்ற சட்டம் 2020ல் இருந்து நடைமுறையில் உள்ளது. மக்கள் அவரவர் சொந்த நலனுக்காக மட்டுமாவது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com