சர்க்கரை நோய்க்கு தற்கொலைதான் தீர்வா?
சமீப காலமாக, நெருக்கடிகள் மிகுந்த இந்த அவசர யுகத்தில் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரே தீர்வாக தங்கள் உயிரை விடுவதுதான் சரி என்று பெரும்பாலோர் தற்கொலை முடிவை கையில் எடுக்கின்றனர். இதனால் அவர்களைச் சுற்றி உள்ள சொந்தங்களும் பந்தங்களும்தான் வாழ்க்கை முழுவதும் அவர்களின் நினைவில் வருந்தும் நிலை உருவாகிறது.
எத்தனையோ மருத்துவ வசதிகள் வந்துவிட்ட இந்தக் காலத்திலும் நோய்க்குப் பயந்து, சிறு மழலைகளுடன் தங்கள் உயிரையே மாய்த்துக்கொண்ட பரிதாபமான குடும்பத்தைப் பார்த்து வேதனையில் மூழ்கி இருக்கிறது சேலம்.
சேலம் தாதகாப்பட்டி நெசவாளர் காலனி சேர்ந்தவர் யுவராஜ்(42) என்பவர் இவரது மனைவி மான்விழி (38). இவர்கள் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு அழகான மகள்கள். பெரிய மகள் பெயர் நேகா வயது 7. இரண்டாவது மகள் பெயர் அக்ஷரா வயது 5 . இவர்கள் நான்கு பேரும் மேட்டூர் அருகே தமிழகம் கர்நாடக எல்லையான அடிப்பாளாறு சென்னம்பட்டி வனப்பகுதியை ஒட்டி உள்ள காவேரி ஆற்றில் நேற்று இறந்து கிடந்தனர். அப்பகுதி மீனவர்கள் தந்த தகவலின் பேரில் அங்கு சென்ற பர்கூர் போலீசார் உடல்களை மீட்டு விசாரித்ததில் யுவராஜின் மூத்த மகள் மேகாவுக்கு மூன்று ஆண்டுக்கு முன் நீரிழிவு நோய் ஏற்பட்டு அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இளையமகள் அட்சராவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கும் நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர்களின் பெற்றோர் காலம் முழுவதும் இரு குழந்தைகளும் சிரமப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியாது என முடிவெடுத்து, அவர்களுடன் காவிரி ஆற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன் யுவராஜ் எழுதிய கடிதத்தில் குழந்தைகள் இருவருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதால், எதிர்காலத்தில் இருவரையும் காப்பாற்ற முடியும் எனும் நம்பிக்கை தங்களுக்கு இல்லை எனவும் அதன் காரணமாகவே தாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததாகவும் இதற்காக தங்களை மன்னித்து விடுமாறும் குறிப்பிட்டு இருந்தது கண்டு அவர்கள் குடும்பத்தினர் பெரும் சோகம் அடைந்தனர்.
மழலைகளுக்காக தவம் இருக்கும் இந்தக் காலத்தில் கையில் தகுந்த பொருளாதாரம், உழைக்கும் வயது, மருத்துவ வசதிகள் இருந்தும் குழந்தைகளுடன் மரணித்த இந்தக் குடும்பத்தின் தற்கொலை . சேலத்தையே அதிர்ச்சி அடைய வைத்தாலும், இந்த முடிவை எடுப்பதற்கு முன் தங்கள் நிலையைத் தகுதியானவரிடம் எடுத்துச் சொல்லி அதற்கான தீர்வைத் தேடாமல் இப்படியொரு முடிவை எடுத்த அவர்கள் மேல் கோபமும் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.