ஜெயலலிதாவின் நிறைவேறாத ஆசை!

ஜெயலலிதாவின் நிறைவேறாத ஆசை!

“தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளது. அந்த ஆசை நிறைவேறினால் அதற்காக நான் என்றும் மாடாய் உழைப்பேன். நாயாய் நன்றி செலுத்துவேன்” என்று கூறியுள்ளார் ஜெயலலிதாவின் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன்.

இது குறித்து அவர் தனது முகநூலில், “முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஒரு சமயம் ஜெயலலிதாவை சந்தித்தபோது, கல்வி அறக்கட்டளை ஒன்றைத் தொடங்குவது பற்றிப் பேசினார். அப்போது என்னை அழைத்த ஜெயலலிதா மூன்று பெயர்களை என்னிடம் கொடுத்து அதில் நியூமராலஜி எதற்கு சரியாக வருகிறது என்று பார்க்கச் சொன்னார். அப்போது என்னைப் பார்த்த சைதை துரைசாமி, ‘தம்பி உன்னைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய நண்பர் புலவருடைய மகன் மீது ஜெயலலிதா வைத்திருக்கும் நம்பிக்கை என்னை மனம் குளிரச் செய்கிறது’ என்று கூறினார்.

தொடர்ந்து அவர், ‘ஜெயலலிதா தம் பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கச் சொல்லி இருக்கிறார். அதில் பூங்குன்றனையும் இணைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு பெரிய நிதியை நான் வழங்குகிறேன். அது உங்கள் இருவரின் பெயரில் நடக்கட்டும் என்று என்னிடம் கூறியிருக்கிறார்’ என்று சொன்னார். அதோடு, என்னையும் அழைத்த ஜெயலலிதா இதே தகவலைச் சொல்லி, ‘அறக்கட்டளைக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் சைதை துரைசாமி செய்வார். அது சம்பந்தமாக அவர் ஏதேனும் தகவல் சொன்னால் அதை உடனே என்னிடம் தெரிவிக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

என் மீது ஜெயலலிதா வைத்திருந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தாலும், இதை வெளியே சொன்னால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் எனக்கு அதிகமாக இருந்தது. கடைசி மனிதன் இருக்கும் வரை அந்த அறக்கட்டளை செயல்பட வேண்டும் என்று நினைத்த ஜெயலலிதாவின் அந்த ஆசை இன்று வரை நிறைவேறவில்லை. இந்த அறக்கட்டளையைத் தொடங்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அது முடியவில்லை. அதை நிறைவேற்றிச் செல்லும் அளவுக்கு என்னிடம் வசதியும் இல்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இந்த ஆசையை நிறைவேற்ற சைதை துரைசாமி முயல வேண்டும். அறக்கட்டளை குறித்த அனுபவம் உங்களுக்கு நிறையவே உண்டு. தொண்டர்களின் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், இயலாதவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை நாம் நனவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com