ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கமல்ஹாசன் பிரச்சாரம் - வித்தியாசமான கோரிக்கையை முன்வைக்கும் கதர் கட்சி வட்டாரங்கள்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் கை சின்னத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் இறங்கப்போவதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.
பிக் பாஸ் சீசன் முடிந்ததும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நிலையிலும் மத்திய, மாநில அரசியல் விஷயங்களை கமல்ஹாசன் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அன்றாட அரசியல் குறித்து அவ்வப்போது டிவிட்டரிலும் பதிந்து வருகிறார்.
விக்ரம் பட வெற்றிக்குப் பின்னர் தி.மு.க தலைமையிலான கூட்டணியினரோடு நெருங்கி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் கலந்து கொண்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடப்போவதாக அறிவிப்பு வந்ததும் உடனடியாக தன்னுடைய கட்சியின் ஆதரவை தெரிவித்திருந்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிக்காக நானும் கட்சியினரும் இயன்ற உதவியை செய்வோம். ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு அவசர நிலை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது. கொள்கை வித்தியாசம் இருந்தாலும், தேச நலனுக்காக ஒரே மேடையில் அமர வேண்டும். ஆகவே, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கிறோம்’ என்று விளக்கமும் தந்திருந்தார்.
கமல்ஹாசனின் அறிவிப்பை தி.மு.க தலைவரான மு..க ஸ்டாலின் வரவேற்றிருந்தார். தி.மு.க கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் கமல்ஹாசனை பாராட்டி வரவேற்று பேசியிருந்தார்கள். அறிவிப்போடு நின்றுவிடாமல், ஈரோடு களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான அருணாச்சலம் தேர்தல் பணிகளில் உடன்பிறப்புகளோடு இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் வரும் 19ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சார பீரங்கியாக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரத்தின் போது கைச்சின்னத்திற்கு வாக்களிக்கும்படி மக்களை கேட்டுக்கொள்ளவேண்டும் என்று சத்தியமூர்த்தி பவனிலிருந்து கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் போட்டியிடாத காரணத்தால் டார்ச் லைட் சின்னம், இன்னொரு கட்சிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, வழக்கம்போல் டார்ச் லைட் சின்னத்திற்கு கமல்ஹாசன் வாக்கு கேட்பதாக வாக்காளர்கள் புரிந்து கொண்டுவிட்டால், தங்களுடைய வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கதர் கட்சி வட்டாரங்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.