"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ".....கான சரஸ்வதி வாணி ஜெயராம் மறைவு!

"ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ".....கான  சரஸ்வதி வாணி ஜெயராம் மறைவு!

திரைப்படப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார் . இவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78. இவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் , திரைப்பட கலைஞர்களும், இசை துறையினரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தான் மத்திய அரசு குடியரசு தின விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இசையரசி வாணி ஜெயராம் குறித்த சில நினைவலைகள்....

திரைப்படப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நவம்பர் 30, 1945 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தவர். . இவரது இயற்பெயர் கலைவாணி . இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பெங்காலி, ஓடியா உட்பட 19 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் துவங்கியது . இவர் தமிழில் 1973 ஆம் ஆண்டு தாயும் சேயும் படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் . அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடி வருகிறார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பல்வேறு மொழிகளிலும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.இவர் "ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி" என்று அழைக்கப்படுகிறார்.

இவர் இதுவரை 19 மொழிகளில் 1000 திரைப்படங்களில் 10000 த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் இதுவரை மூன்று முறை தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். இவர் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ரகங்கள் படத்தில் பாடிய "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் " பாடலுக்காக சிறந்த பின்னணி படகிக்கான தேசிய விருதினை பெற்றார். 1980 சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதினை சங்கராபரணம் படத்தின் பாடல்களுக்காக பெற்றுள்ளார். 1991 சிறந்த பின்னணி பாடகிக்கான விருதினை சுவாதி கிரணம் படத்தின் பாடல்களுக்காக பெற்றுள்ளார் .

இவர் பாடிய "மல்லிகை என் மன்னன் மயங்கும்.... பொன்னான மலர் அல்லவோ" பாடலுக்கு மயங்காத இதயங்கள் தான் உண்டா?இவர் பாடிய "மேகமே மேகமே ...பால் நிலா தேடுதே" பாடலில் இழையோடிய சோகம் எவர் மனதினையும் உருக்க வல்லது. "கேள்வியின் நாயகனே" என்கிற பிரபல பாடல் கேட்பவர் பலரையும் மயக்கி வைத்தவை.

இவர் கர்நாடக சங்கீதத்தில் பெரும் புலமை பெற்றவர். இவர் திரை இசை பாடல்களோடு ஏராளமான பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். இவர் தெலுங்கு மொழியில் பாடிய பக்தி பாடல்கள் பிரபலமானவை. இவர் பல மொழிகளிலும் மாநில அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இவரது இதய சுரங்கத்தில் தான் எத்தனை எத்தனை கானங்கள், ராகங்கள். இனி இந்த கான சரஸ்வதியின் கானங்கள் காற்றில் மிதக்கும் கீதமாய் பால்வெளியெங்கும் ஒலித்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com