கிராம சபை போல், ஏரியா சபை ஆரம்பம் - சிங்கார சென்னைக்கு கூடுதல் செலவா?
கிராம பஞ்சாயத்துகளில் நடத்தப்படும் கிராம சபை போல், சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் ஏரியா சபை நடத்த முடிவு செய்துள்ளதால், கவுன்சிலர்களுக்கு கடுமையான நெருக்கடி எழுந்திருக்கிறது. வார்டு கமிட்டி உறுப்பினர் பதவியை கைப்பற்ற தி.மு.கவினர் இடையே கடும் போட்டியும் எழுந்திருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் அமைக்கப்படவுள்ள ஏரியா சபைக்கு 10 உறுப்பினர்கள் வீதம், ஏறக்குறைய இரண்டாயிரம் பேரை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. வார்டு கமிட்டி உறுப்பினர்கள் ஏரியா சபையை நடத்தி, மக்கள் பிரச்னையை கவுன்சிலரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்களாம்!
கிராமப்புறங்களில் ஆண்டுக்கு நான்கு முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மக்களின் பிரச்னைகள், தேவைகளை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கேட்டு அறிய முடியும். கிராமப் பஞ்சாயத்தின் வரவு, செலவு விவரம், செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.
கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவதுபோல், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் மக்களின் பங்கேற்புடன் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி ஆகியவற்றை நடத்த வேண்டும் என்பது நீண்ட நாளைய திட்டமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏரியா சபைக்கான விதிகளுடன் அரசாணை வெளியிட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும். ஒரு வார்டில் உள்ள ஏரியாக்களின் அடிப்படையில் வார்டு கமிட்டி உறுப்பினர்களை நியமித்துக்கொள்ளலாம். இதன் தலைவராக அந்த வார்டின் கவுன்சிலர் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 153 வார்டுகளில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. 15 வார்டுகளில் அ.தி.மு.கவும், 13 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும் மீதமுள்ள இடங்களில் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளும் வார்டுகளை வசப்படுத்தியுள்ளன. ஏறக்குறைய 200 வார்டுகளில் ஒவ்வொன்றிலும் பத்து உறுப்பினர்கள் வீதம் 2000 வார்டு கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏரியா சபை கூடி பேசியாக வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் 10 கூட்டங்கள் நடத்தப்படவேண்டும். கூட்டத்திற்கான செலவுகளை யார் ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
கிராம சபைக் கூட்டங்களுக்கான செலவு என்பது குறைவு. ஆனால், சென்னை போன்ற நகரங்களில் கூட்டம் நடத்தவேண்டுமென்றால் ஏகப்பட்ட லட்சங்கள் செலவாகும்.
இனி மக்கள் பிரச்னைகள் குறித்த புகார்களை இனி கவுன்சிலரிடம் தரமுடியாது. சம்பந்தப்பட்ட ஏரியா சபை வார்டு உறுப்பினரிடம் தரவேண்டும்.
முதல்வரின் தனிச் செயலாளருக்கே நேரடியாக புகார் அனுப்புமளவுக்கு தொழில்நுட்பம் கைகொடுத்து வரும நிலையில் புகார்களை வார்டு கமிட்டி உறுப்பினர்கள் மூலமாக கவுன்சிலருக்கு தரவேண்டும் என்பதெல்லாம் நடவடிக்கைகளில் இன்னும் தாமதப்படுத்தும்.
சென்னை போன்ற நகரங்களில் கவுன்சிலர்கள் ஏற்கனவே அமைச்சருக்கான அந்தஸ்தோடு உலாக வருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வார்டு கமிட்டி உறுப்பினர்கள், ஒன்று கூடி பேச ஏரியா சபை போன்றவையெல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டால் செலவுகள் கூடுவதோடு, தேவையில்லாத சர்ச்சைகளும், அதிகாரப் போட்டிகளும், மோதல்களும் எழும் என்கிறார்கள், சென்னைவாசிகள்.