சட்டென கிளம்பி சிட்டென பறக்க மதுரை டூ திருச்சி பறக்கும் பாலம்: நாளை மறுநாள் பிரதமர் திறந்துவைக்கிறார்!

சட்டென கிளம்பி சிட்டென பறக்க மதுரை டூ திருச்சி பறக்கும் பாலம்: நாளை மறுநாள் பிரதமர் திறந்துவைக்கிறார்!

துரை-நத்தம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள 7.5 கி.மீ. தொலைவுக்கான பறக்கும் பாலம், சோதனை ஓட்டத்துக்காக நேற்று திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தில் சோதனை ஓட்டத்துக்காக நேற்றும், இன்றும் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பறக்கும் பாலத்தை நாளை மறுநாள், ஏப்ரல் 8ம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.

மதுரையில் இருந்து நத்தம் வரையிலான 35 கி.மீ. சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து அந்த சாலை 1,028 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு, அதற்கான கட்டமைப்புப் பணிகள் நடைபெற்றன. இதில், மதுரை அவுட் போஸ்ட் முதல் ஊமச்சிகுளம், மந்திகுளம் வரையிலான 7.5 கி.மீ. தொலைவுக்கு 612 கோடி ரூபாயில் பறக்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணி 2018 செப்டம்பரில் தொடங்கியது. மீதியுள்ள 416 கோடி ரூபாயில் ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 28 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் பாலத்துக்காக 150 அடிக்கு ஒரு தூண் வீதம் மொத்தம் 268 ஒற்றை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பறக்கும் பாலத்தில் சொக்கிகுளம் கோகலே ரோட்டிலும், அழகர்கோவில் சாலையில் மாநகராட்சி எகோ பார்க் அருகில் இருந்தும், மாவட்ட நீதிமன்றம் நோக்கிய சாலையில் மாநகராட்சி வாயில் அருகில் இருந்தும் மொத்தம் மூன்று பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரை அவுட்போஸ்டில் பாலத்தில் ஏறினால், அய்யர்பங்களா, நாராயணபுரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. ஊமச்சிகுளத்தில் பறக்கும் பாலத்தில் இருந்து இறங்கியதும், புதிய நான்குவழிச்சாலை வழியாகச் சென்று, நத்தம் கொட்டாம்பட்டி சாலையை அடையும். அங்கிருந்து கொட்டாம்பட்டி வழியாக துவரங்குறிஞ்சி அருகே திருச்சி நான்குவழிச் சாலையில் போய் சேரும். எனவே, இந்த பறக்கும் சாலை பாலம் வழியாக செல்லும்போது திருச்சிக்கு 23 கி.மீ. பயணத் தொலைவும், அதிக நேரமும் மிச்சமாகும்.

சோதனை ஓட்டத்துக்காக நேற்று திறக்கப்பட்ட இந்த நீண்ட பறக்கும் சாலை பாலத்தில் வாகன ஓட்டிகள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது வாகனங்களில் ஒரு ரவுண்டு வந்து சந்தோஷமடைந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com