மு.க அழகிரியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

மு.க அழகிரியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டு கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக மு.க.அழகிரியை கட்சி பொறுப்புகளில் இருந்து திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நீக்கினார். அன்றிலிருந்து ஸ்டாலினும் அழகிரியும் எதிரும் புதிருமாக இருந்தார்கள். இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்தார்கள்.

2020 வரை சென்னை, மதுரை விமான நிலையங்களில் திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எதிராகவும், கிண்டலாகவும் அவ்வப்போது செய்தியாளர்களிடம் பேட்டி கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் மு.க.அழகிரி. ஆனால் 2021 ஸ்டாலின் முதல்வர் ஆனபிறகு மு.க.அழகிரி அரசியல் ரீதியாக பொதுவெளியில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

2021ல் திமுக வெற்றி பெற்ற பின்னர் பதவியேற்பு விழாவுக்கு அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அவரது மகன் துரைதயாநிதி வந்திருந்தார். அவரை உதயநிதி கட்டியணைத்து வரவேற்றார்.

அதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின் மதுரை செல்லும் போதெல்லாம் அழகிரியை சந்திக்க வாய்ப்பு உள்ளது என்பதாக யூகங்கள் கிளம்பின. ஆனால் அத்தகைய சந்திப்பு நடைபெறவில்லை. துரை தயாநிதியின் இரண்டாவது குழந்தையின் பெயர் சூட்டும் நிகழ்ச்சி, கலைஞர் பிறந்தநாள் என சில நிகழ்ச்சிகளில் சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. அப்போதும் சந்திப்பு நடைபெறவில்லை.

மு.க.அழகிரி தனது தம்பி ஸ்டாலின் மீது கசப்புணர்வில் இருந்தாலும், தி.மு.கவுக்கு சிக்கல் ஏற்படுத்தும் விஷயங்கள் எதையும் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு செய்யவில்லை. முதல்வர் ஸ்டாலினும் பொது மேடைகளில் அவ்வப்போது தனது அண்ணன் அழகிரி பெயரைக் குறிப்பிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த மாதம் சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தனது அண்ணன் மு.க அழகிரியும் இங்குதான் படித்தார் என அழுத்தி சொன்னதோடு நானும் இங்குதான் படித்தேன் என பழைய நினைவுகளை சுவாரசியமாக பேசியிருந்தார்.

 இரு தரப்புக்கும் இருந்த மனக்கசப்பை கலைஞரின் மகள் செல்வி எப்போதோ பேசி சரி செய்துவிட்டதாக கூறப்படும் நிலையில் ஸ்டாலின் -அழகிரி சந்திப்பு நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் மதுரையில் நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். மதுரை சென்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துப் பேசினார். மு.க அழகிரிக்கு சால்வை அணிவித்து உதயநிதி ஸ்டாலின் ஆசிபெற்றார்.

இதையடுத்து பேட்டி அளித்த மு.க அழகிரி, "உதயநிதி ஸ்டாலின் எனது இல்லத்திற்கு வந்தது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் தொடர்ந்து திமுகவில் செயல்படுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும்" என்று பேசினார். முன்னதாக பேட்டி அளித்த மு.க அழகிரி, பெரியாப்பவை காண தம்பி மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார் என்று கூறியிருந்தார்.

கண்கள் பனிக்க, இதயம் இனித்த நிகழ்வு நேற்றிரவு மதுரையில் நடைபெற்ற நிலையில் அழகிரி ஆதரவாளர்கள் உற்சாகமாகியுள்ளனர். அழகிரிக்கு கட்சியில் முக்கிய பதவி கிடைத்தால் தங்களுக்கும் பதவிகள் கிடைக்கும், பழைய செல்வாக்கு வரும் என்று நம்புகின்றனர். ஏற்கனெவே மதுரை திமுகவில் ‘அமைச்சர் மூர்த்தி Vs அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்’ அரசியல் பரபரப்பாக போய்கொண்டிருக்கும் நிலையில் அழகிரி எண்ட்ரி ஆனால் பரபரப்பு சம்பவங்களுக்கு பஞ்சமிருக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com