ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ‘நாம் தமிழர்’ கட்சி தனித்துப் போட்டி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ‘நாம் தமிழர்’ கட்சி தனித்துப் போட்டி!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவான திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் ஆவார்.

இதன் காரணமாக காலியாக உள்ள இத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவர் போட்டியிடுகிறார். டிடிவி தினகரனின் அமமுக சார்பில் சிவபிரசாந்த் என்பவர் போட்டியிடுகிறார். இந்த 2 கட்சிகளும் தனித்து களமிறங்குவதாக தெரிவித்து வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

நாம் தமிழர் கட்சி

இந்நிலையில் ‘நாம் தமிழர்’ கட்சி வேட்பாளராக மேனகா என்பவர் போட்டியிடுவதாக சீமான் நேற்று அறிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளராக மேனகா போட்டியிட உள்ளார். மொழிப்பற்று, இனப்பற்று ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர் இவர். அதனால் இந்த வாய்ப்பை தங்கைக்கு வழங்கி உள்ளோம்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுவதாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருந்தார்.

 இதுபற்றி சீமான் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தெருத் தெருவாக சென்று மக்களை சந்திப்பது தான் எங்களின் அணுகுமுறையாக இருக்கும்.

அதேபோல், யாருடைய வாக்கையும் பிரிக்க நாங்கள் நினைக்கவில்லை. வெல்வதற்காகவே போட்டியிடுகிறோம்.

வரும் 2ம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் செய்யப்படும். மற்ற கட்சிகள் பணத்தை கொட்டுவார்கள். ஆனால் நாங்கள் எங்களின் கருத்தையும் கொள்கைகளையும் முன் வைப்போம்.

எப்பொழுது இடைத்தேர்தல் நடந்தாலும் ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் என்பது வெறும் மாயை. வாக்களிக்கும் மக்கள் மாற்றத்தை விரும்பினால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் காணாமல் போய்விடும். மக்கள் நினைத்தால் அனைத்தையும் புரட்டிப்போட முடியும்.

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு காரணமாக நாம் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளோம். இந்தத் தேர்தலில் மக்களிடையே உண்மையை உரக்க சொல்வோம். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில், 34 சதவிகித வாக்காளர்கள் வாக்கு செலுத்தவில்லை. அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் பணிகள் செய்ய வேண்டி இருந்தது. அதனால் ஒருநாள் மட்டுமே ஈரோடு கிழக்கில் பணி செய்தேன்.

ஆனால் இம்முறை 12 நாட்களுக்கு மேல் ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்கி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். வடமாநிலத்தவர்கள் தமிழ் இளைஞர்களை தாக்கியதை இவர்களால் தடுக்க முடியாது. அது என்னால் மட்டுமே முடியும். எனக்கு வாக்களித்து மக்கள் வெற்றிபெற வைக்க வேண்டும். நாங்கள் வென்றால் மாற்றம் வரும்.

இவ்வாறு சீமான் செய்தியாளர்களிடம் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com