படிப்படியாக குறைக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை - தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகிறதா?

படிப்படியாக குறைக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை - தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகிறதா?

பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் சென்னையிலிருந்து தினமும் பேருந்து வசதி இருந்தது. திருவண்ணாமலை, கடலூர் போன்ற பகுதிகளில் இருந்து அரை மணிக்கொரு முறை சென்னைக்கு பேருந்துகள் கிளம்பும் நிலை இருந்து வந்தது. கொரானாவுக்கு பின்னர் நிலைமை தலைகீழாகிவிட்டது.

ஒகேனக்கல், ஏலகிரி உள்ளிட்ட சுற்றுலாத்தளங்களுக்கான பேருந்து சேவைகள் கூட கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளன. தருமபுரி, பென்னாகரம் பகுதிகளிலிருந்து இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் இரவு எட்டு மணிக்கு மேல் ஓடுவதில்லை. கொரானாவுக்கு முன்னர் இரவு பத்து மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் நிலை இருந்து வந்தது.

ஒகேனக்கல் போன்ற பகுதிகளில் மாலை 6 மணிக்கு மேல் குறைந்த அளவில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் வருவதால் இரவில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பழைய நடைமுறைப்படி இரவு 10 மணி வரை பேருந்து சேவை வேண்டுமென்றால் கணிசமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலை நாடி வந்தாக வேண்டும்.

அதிகமான சுற்றுலா பயணிகள் இருந்தால் மட்டும் போக்குவரத்து இயக்கப்படும். குறைந்த அளவிலான ஆட்களுக்காக பேருந்தை இயக்குவதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே பேருந்து சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

மகளிருக்கான இலவச பேருந்து பயணம், போக்குவரத்துக் கழகத்திற்கு ஏராளமான நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், முதல்வரின் முதல் நாள் உத்தரவு என்பதாலும், அவரது தனிக்கவனத்தில் செயல்பட்டு வரும் திட்டமென்பதால் அதன் காரணமாக வரும் நஷ்டம் குறித்து யாரும் பேசுவதில்லை. இது தவிர பத்தாண்டுகாலமாகவே பேருந்து டிக்கெட் விலை உயர்த்தப்படாத காரணத்தால் போக்குவரத்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டை கடந்தவை. இவற்றிற்கு இன்னும் ஓய்வு கொடுக்ககாமல் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு மேலான பேருந்துகளை அகற்றவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட பிறகும், அவற்றை ஓராண்டாவது இயக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.

15 ஆண்டுகளைக் கடந்த அரசுப்பேருந்துகளை அகற்றும் திட்டம் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதற்கேற்ப போக்குவரத்துக் கழகங்கள் திட்டமிட்டிருக்க வேண்டும். 15 ஆண்டுகளை கடந்தவை சுற்றுச்சுசூழல் சீர்கேட்டிற்கும் காரணமாகிவிடுகிறது. புதிய பேருந்துகளை வாங்குவதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை என்று போக்குவரத்து கழக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்நிலையில் விரைவு பேருந்துகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, வழிகாட்டவேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளுடன் ஏதும் வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக நேரக் காப்பாளரிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டும் என்று போக்குவரத்துக் கழகத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஒரு மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகார் செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை கவனிக்கவேண்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com