ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் - அ.தி.மு.க ஆதரவு!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் - அ.தி.மு.க ஆதரவு!

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டமான "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்னும் நடைமுறையைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சியெடுத்து வருகிறது. இது தொடர்பான பல்வேறு மட்டங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. மத்திய சட்ட அமைச்சகம், அனைத்து அரசியல் கட்சிகளிடமும் இது குறித்து கருத்து கேட்குமாறு தேசிய சட்ட ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி பொதுமக்கள், அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்டு வருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக்கட்சிகள் மற்றும் 59 மாநிலக்கட்சிகள் இது குறித்த விவாதங்களில் பங்கேற்றன. எதிர்க்கட்சி என்பதால் எதிர்பார்த்தது போல காங்கிரஸ் கட்சி திட்டத்தை எதிர்த்தது. ஆனால், பாஜகவை எதிர்க்கும் ஒரு சில மாநிலக்கட்சிகள் குறிப்பாக தெலுங்கானா டி.ஆர்.எஸ், உ.பியின் சமாஜ்வாதிகட்சியை ஆகியவை ஆதரிக்கின்றன.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதியிருக்கிறது. அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. அதையெடுத்து எடப்பாடி தரப்பை மத்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டதாக பரபரப்பு கிளம்பிய நிலையில் தமிழக தேர்தல் இணையம் இன்னொரு கடிதத்தை அனுப்பியதால் குழப்பம் வந்தது.

இந்நிலையில் ஜனவரி 16-ந்தேதிக்குள் அரசியல் கட்சிகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும்படி சட்ட ஆணையம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருந்தது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிதுராஜ் அவஸ்தி இது குறித்து கடிதம் எழுதியிருந்தார். இணைய வழியில் 30 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஒரு வழியாக ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு இணையவழியிலில் கடிதம் அனுப்பியுள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க, ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் அடிக்கடி தேர்தல் நடப்பதால் அ.தி.மு.க. செலவினம் ஏற்படுவதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய சேவைகள் தடைபடுவதாகவும் ஏற்கனவே விவாதங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே சட்டத்துறை அமைச்சகம் பல கூட்டங்களை நடத்தியிருக்கிறது. இது தொடர்பாக பாராளுமன்ற குழு ஆய்வு மேற்கொண்ட சில பரிந்துரைகளையும் அளித்துள்ளது. இதுகுறித்து சட்ட ஆணையம் தான் முடிவு செய்ய முடியும்.

2019ல் நாடாளுமன்றத்தோடு சேர்ந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராக இல்லை என்பதால் அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கிறது. மாநில உரிமைகள் விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதாக திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் அ.தி.மு.க தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு "ஓகே" சொல்லியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com