விடுதியிலிருந்து வெளியேற அனுமதியின்றி கதறிய வெளிமாநில பெண் தொழிலாளர்கள்! தொழிலாளர் நலத்துறை விசாரணைக்கு உத்தரவு!

விடுதியிலிருந்து வெளியேற அனுமதியின்றி கதறிய வெளிமாநில பெண் தொழிலாளர்கள்! தொழிலாளர் நலத்துறை விசாரணைக்கு உத்தரவு!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலஜாபாத் அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தில் SVS MARG எனும் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஒரகடத்தில் இயங்கி வரும் சீன நிறுவனமொன்றில் பணிபுரியும் 800க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விடுதியை தென்னேரி ஊராட்சி ஒன்றியத் தலைவரான கலையரசியின் கணவர் முனிராஜ் என்பவர் ஒப்பந்தத்தில் எடுத்து நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.இந்த விடுதியைச் சேர்ந்த ஷைலஜா, பவானி எனும் இரு வெளிமாநிலப் பெண்கள் தங்களது வீட்டில் சகோதரிகளுக்கு நடக்கவிருக்கும் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொள்ள வேண்டி சொந்த ஊருக்குச் செல்ல தயாராகினர்.

சொந்த ஊருக்குச் செல்ல பெட்டி, பைகளுடன் கிளம்பிய அவர்கள் இருவருமே விடுதியின் நுழைவாயிலில் விடுதி ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை நுழைவாயிலைத் தாண்டி வெளியில் அனுப்ப விடுதி நிர்வாகம் தயாராக இல்லை. அந்தப் பெண்கள் எவ்வளவு எடுத்துச் சொன்ன போதும் அதைக் செவி மடுத்துக் கேட்கும் பக்குவம் அங்கு யாருக்குமே இருந்ததாகத் தெரியவில்லை. இறுதியில் விடுதி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து வெளியேற அந்த இரு பெண்களும் கதறித் துடிக்க வேண்டியதாயிருந்தது. அப்போது அந்தப் பகுதியைக் கடந்து சென்ற பொதுமக்களில் சிலர், விடுதி ஊழியர்களிடம், அந்தப் பெண்களை வெளியில் விடச்சொல்லி ஆலோசனை கூறியும் கூட விடுதி ஊழியர்கள் அதைக் காதில் போட்டுக் கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. இந்நிலையில், நேரம் செல்லச் செல்ல, எங்கே தாங்கள் செல்ல வேண்டிய ரயில் பெட்டியை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் அந்த வெளிமாநில பெண் ஊழியர்கள், அந்தப் பக்கமாக கடந்து சென்றவர்களை பார்த்து உதவி வேண்டி ஹெல்ப் மீ, ஹெல்ப் மீ என்று கதறத் தொடங்கி விட்டனர்.

தங்களிடம் உதவி வேண்டி கதறித் துடிக்கும் வெளிமாநிலப் பெண் ஊழியர்களைக் கண்டு மனமிரங்கிய சில உள்ளூர்க்காரர்கள், அவர்களை வெளியில் விடச் சொன்ன போது, அதை ஒரு பொருட்டாகவே மதிக்காத விடுதி ஊழியர்கள், கதறித்துடித்த பெண் ஊழியர்களை கையைப் பிடித்து வலிந்து இழுத்து விடுதிக்கு உள்ளே தள்ள முயன்றனர். இதை வன்முறையின் உச்சம் என்று சொன்னால் கூட தவறில்லை. அந்த அளவுக்கு மனிதாபிமானமின்றி அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

இதை பொதுமக்களில் சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடவே, அதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்தது.

இந்தத் தகவல் அறிந்து அதைப் பற்றி விசாரிக்க காவல்துறை விரைந்தது. ஆனால், அவர்களையும் உள்ளே விட மறுத்த விடுதி நிர்வாகம், தங்களது நிர்வாகத்திடம் இருந்து அனுமதி கிடைக்கும் வரை காவலர்களையும் கூட சற்று நேரம் வெளியில் நிற்க வைத்தது. பின்னர் ஒருவழியாக அனுமதி கிடைத்து உள்ளே நுழைந்த காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்த செய்தி இது தான்,

குறிப்பிட்ட அந்த 2 வெளிமாநிலப் பெண் தொழிலாளர்களும் விடுப்பு எடுத்ததை தொழிற்சாலை நிர்வாகமானது, முறைப்படி விடுதி நிர்வாகத்திடம் அதுவரை தெரிவித்திராத காரணத்தால், அவர்களை நிறுவனத்தின் அனுமதியின்றி வெளியேறிச் செல்ல மறுத்ததாக விடுதி நிர்வாகம் தெரிவித்தது. பின்னர் விவரம் தெரிய வந்ததும், அந்த இரு பெண்களையும் ஆட்டோவில் ஏற்றி விட்டு உரிய நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் விடுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தொழிலாளர் நலத்துறைக்கு முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் உள்ள பல விடுதியில் ஊழியர்களை அடைத்து வைத்து கொடுமைப் படுத்துவதாகப் சமீபகாலமாகப் புகார்கள் அதிகரித்து வருகின்றன. அங்குள்ள பல விடுதிகள் முறையான அரசு உரிமம் மற்றும் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படுகின்றன என்றும் புகார்கள் வலுத்துவருகின்றன. அது குறித்த விசாரணை விரைவில் தொடங்கவிருப்பதாகத் தகவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com