வளர்ப்பு யானை தாக்கி பாகன் பலி!
நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காட்டில் உள்ளது அபயராண்யம் வளர்ப்பு யானைகள் முகாம். இந்த முகாமில் மொத்தம் 28 யானைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வளர்ப்பு யானைகளை அங்கேயே வசித்து வரும் பாகன்களே பராமரித்து வருகின்றனர். யானைகளுக்குத் தேவையான உணவுகளை அளிப்பது முதல் அவற்றை நடை பயிற்சி போன்றவற்றுக்கு அழைத்துச் செல்வது வரை அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் இவர்களே செய்து வந்தனர்.
இந்த வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற யானையும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை 54 வயதான பாலன் என்ற பாகனே பல வருடங்களாகப் பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தினமும் அந்த யானைக்கு ஊட்டச் சத்து மிகுந்த தானியங்களை உணவாகக் கொடுப்பது, பிறகு சற்று நேரம் அந்த யானையை அருகில் உள்ள இடங்களுக்கு நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, மீண்டும் அந்த யானையை முகாமுக்கே அழைத்து வருவது என தினசரி பணிகளைச் செய்து வந்தார்.
அப்படித்தான் இன்று காலையும் பாகன் பாலன் உணவு தயாரித்து அதை மசினி யானைக்குக் கொடுப்பதற்காக யானையின் அருகில் கொண்டு சென்றார். அந்த யானைக்கு உணவு கொடுக்க அருகில் சென்றபோது, யாரும் எதிர்பாராத விதமாக அந்த யானை திடீரென்று பாகன் பாலனை பலமாகத் தாக்கி விட்டது. இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்துபோன பாலன், பலத்த காயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
இதைக் கண்ட மற்ற பாகன்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து உடனே வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து படுகாயமடைந்த பாலனை வனத்துறை வாகனத்தில் கூடலூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே பாலன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதைத் தொடர்ந்து பாலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. வளர்ப்பு யானையே பாகனைத் தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.