முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அரசு விழா அல்ல, மக்கள் விழா - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

625 கோடி மதிப்பிலான திட்டங்கள் திருச்சி மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதாக நேற்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். திராவிட மாடல் கொள்கையை முன்னிறுத்தி வழுவாத ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாகவும் பேசிய முதல்வரின் பேச்சில் ஒரே உற்சாகம்!

'எங்களது ஆட்சியில் அரசு விழாக்களை மக்கள் விழாக்களாகவே நடத்தி வருகிறோம். அதன் மூலம் மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளைச் செய்யும் விழாவாகவே அதை முன்னிறுத்துகிறோம். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பயன் பெறும்வரையில் அறிவிப்புகள் வெளியிடும் வகையில் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்படுகிறது' என்று பேசிய முதல்வர் ஸ்டாலின், 2022 ஆண்டு நினைவலைகளாக தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

'தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்திருக்கிறேன். 647 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அதில் 551 அரசு நிகழ்ச்சிகள். 96 கட்சி நிகழ்ச்சிகள்' என்று புள்ளிவிபரங்களை பட்டியலிட்டவர், பிஸியான நேரத்திலும் என்னால் இதை செய்ய முடிந்திருக்கிறது. நடுவே கொரோனா பாதிப்பு வந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டேன். ஆனாலும் என்னுடைய பயணம் தடைபடவில்லை' என்றார்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்கள்.

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளை முன்னெடுத்ததற்காக அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பாராட்டு தெரிவித்த முதல்வர், புதிதாக அமைச்சராகியிருக்கும் உதயநிதி ஸ்டாலின் மீதும் நம்பிக்கை தெரிவித்து பேசினார்.

'உதயநிதி அமைச்சரவைக்குத்தான் புதியவரே தவிர, உங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமான பழைய முகம்தான். அவர் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டபோது விமர்சனம் வந்தது. விமர்சனம் வரத்தான் செய்யும். அவர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றபோதும் விமர்சனம் வந்தது. விமர்சனங்களுக்கு தன்னுடைய செயல்பாட்டால் பதில் சொன்னார். அதன் மூலம் தன்னை நிரூபித்துக்காட்டினார் என்று உதயநிதியை முதல்வர் புகழ்ந்து பேசியதும் அரசு விழாவின் ஹைலைட்தான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com