குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் சேலத்தில் துவக்கம்.

குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் சேலத்தில் துவக்கம்.

மிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் 50 வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் நேற்று துவங்கியது.  மேலும் மூன்று புள்ளி 35 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப் படுகிறது.

நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் வாகன எரிபொருள் சமையல் எல் பி ஜி காஸ் பயன்பாடுகள் மற்றும்  நிலக்கரி விறகு போன்ற திடப்பொருள் உபயோகம் போன்றவற்றைக் குறைத்து இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நிலத்திற்கு அடியில் இருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயுவை சேகரித்து வீடுகளுக்கான எரிவாயு, வாகன எரிபொருள், தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக கடந்த 2005ஆம் ஆண்டு நகர எரிவாயு விநியோக திட்டத்தை அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் மூலம் ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் கீழ் சேலம் மாவட்டம் முழுவதும் ரூபாய் 1300 கோடி மதிப்பில் மூன்று புள்ளி 35 லட்சம் வீடுகளுக்கும் 158 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் இயற்கை எரிவாயு வழங்கிடும் வகையில் போட்ட திட்டங் களுக்கான  பணி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக சேலம் இரும்பாலையில் இயற்கை எரிவாயு மையம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் இருந்து திரவ எரிவாயு இந்த மையத்திற்கு கொண்டு வரப்பட்டு குழாய் மூலம் அனுப்பும் இயற்கை எரிவாயுவாக மாற்றம் செய்யப்படுகிறது.  இந்த மையத்தில் இருந்து முதற்கட்டமாக சேலம் இரும்பாலை காலனி, சோளம் பள்ளம், குரங்கு சாவடி, சித்தன்னூர், திருவாக் கவுண்டனூர், சங்கர் நகர், அழகாபுரம் ஆகிய பகுதிகளில்உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் சேலம் மாநகரில் உள்ள 450 வீடுகளுக்கு முதல் கட்டமாக இணைப்புகள் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை எரிவாயு மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டத் தொடக்க நிகழ்ச்சி இரும்பாலையில் நேற்று (23-5-23) நடந்தது. இதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பைக் பிரிவு இயக்குனர் டி எஸ் நானோவர் தலைமை தாங்கி மையத்தை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்

இதன் மூலம் தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் 50 வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் வெற்றிகரமாக துவங்கப்பட்டது  சிறப்பைப் பெறுகிறது.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது “450 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக இரும்பாலை காலனியில் உள்ள 50 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் குழாய் மூலம் நேற்று முதல் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்காக பொதுமக்களிடம் இதற்கான விருப்ப விண்ணப்பங்கள் பெரும் பணியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இதேபோன்று இரும்பாலையில் உள்ள ஆவின் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு நிரப்பும் பணியும் நேற்று துவங்கி வைக்கப்பட்டது .

விரைவில் சேலத்தின் 157 பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வீடுகளுக்கு இயற்கை எரிவாயு நேரடியாக வழங்கும் இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் சேலம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்பட 11 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொள்ள எரிவாயு திட்ட ஒழுங்குமுறை வாரியம் அங்கீகரித்து உள்ளது” என்று கூறினார். தொடக்க நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நகர இயற்கை எரிவாயு செயல் இயக்குனர் எஸ் கே ஷா , தென் மண்டல குழாய் பாதை பிரிவு செயல் இயக்குனர் டி எஸ் நானோவர்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் நிச்சயம் காற்றில் கலக்கும் மாசுகள் நீங்கி சுவாசிக்க தூய்மையான காற்று கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com