ஞாயிற்றுக்கிழமை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறை அனுமதி!
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த மாநிலக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதனை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கி இருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருந்தது. இதனை அடுத்து, இரு தரப்பினரும் தங்களது வாதத்தை முன் வைத்து வாதாடினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 11ம் தேதி உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது.
அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை மொத்தமாக தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி இருந்த தீர்ப்பை உறுதி செய்தது.
அதனைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்து உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது பேரணியை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது. சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது தமிழக காவல்துறையினரும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.