பிரதமரின் சென்னை விசிட் : சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கிறார்!

பிரதமரின் சென்னை விசிட் : சென்னை - கோவை வந்தே பாரத் ரயிலை துவக்கி வைக்கிறார்!

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். வரும் ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை வரும் பிரதமர், வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். சென்னை விமான நிலையத்தில் உள்ள புதிய கட்டிடத்தையும் திறந்து வைக்க இருக்கிறார்.

கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. பா.ஜ.க சார்பில் பிரச்சாரத்தை முன்னெடுக்க பிரதமர் பலமுறை பெங்களூர் வந்து சென்றிருக்கிறார். ஆனால், சென்னைக்கு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வருகை தரவிருக்கிறார். இம்முறை இரண்டு நாட்கள் சென்னையில் பிரதமர் தங்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை விமானநிலையத்தில் உள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் கலந்து கொள்கிறார். மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைக்கிறார். சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டின் கலாசாரம் மற்றும் பெருமைகளை பிரதிபலிக்கும் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. சோதனை கவுண்டர்கள், லக்கேஜ் கவுண்டர்கள் உள்ளிட்ட சோதனை கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சோதனைகளை விரைவாக முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும். புதிய விமான முனையத்தில் ஆண்டுக்கு சுமார் 2.7 கோடி பயணிகள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் சென்னை வருகையில் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கும் நிகழ்வும் நடைபெறவிருக்கிறது. இந்தியா முழுவதும் ஏற்கனவே 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்னும் பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டன.

வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. வந்தே பாரத் ரயில் பெட்டிகள், சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

வந்தே பாரத் ரயில் மூலம் 6 மணி நேரத்தில் சென்னையிலிருந்து கோவை சென்று விட முடியும். மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில், கோவை மக்களுக்கு சென்னை வந்து செல்ல வசதியாக இருக்கும். சென்னையிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில், காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com