ரூ. 150 மதிப்பிலான அரவிந்தர் உருவம் பொறித்த நாணயம்: பிரதமர் வெளியீடு!

ரூ. 150 மதிப்பிலான அரவிந்தர் உருவம் பொறித்த நாணயம்: பிரதமர் வெளியீடு!

மகான் அரவிந்தரின் 150 வது பிறந்த ஆண்டை யொட்டி, ரூ 150 மதிப்பிலான  அவரது உருவம் பதித்த நாணயம் மற்றும் தபால் தலை வெளியீட்டு விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி டெல்லியிலிருந்து காணொலி மூலம் கலந்துகொண்டு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார்.

இதையடுத்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மோடி புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரவிந்தரின் உருவம் பொறித்த நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி சிறிய மாநிலம் என்றாலும் சிறந்த ஆன்மிக பூமி, இங்கு பல ஞானிகளும் சித்தர்களும் வாழ்ந்துள்ளனர்.

இந்த மாநிலத்திற்கு வருகை தந்த மகான் அரவிந்தரை, முதலில் பாரதியார் வரவேற்று தங்க வைத்துள்ளார். இங்கு வந்த பின்னரே அரவிந்தர் உலகுக்கே ஆன்மிக குருவாக உருவானார். உலக அரங்கில் நமது நாடு சிறந்து விளங்க வேண்டும் என நினைத்தவர் மகான் அரவிந்தர். அவரது கனவு இன்று நிறைவேறி வருகிறது.

பிரதமரின் ஆன்மிக பலம் இந்த நாட்டை உயர்த்தியுள்ளது. ஆன்மிக பலத்தால் மட்டுமே மனிதன் சிறந்து வாழ முடியும் என்ற தத்துவத்தை நமது சித்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். அப்படிப்பட்ட சிறந்த தத்துவ ஞானியான மகான் அரவிந்தர் இங்கே தங்கியதால்தான் புதுச்சேரி மாநிலத்தை உலக அளவிற்கு நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மகான் அரவிந்தர் ஆசிரமத்திற்கு வருகின்றனர்.

-இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com