காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தம்பதியினரிடம் ரூ.4000 வசூல். காவலர்கள் கைது!
சென்னை படப்பையில் சனிக்கிழமை இரவு தம்பதிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தாம்பரம் நகரக் காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். தம்பதியினர் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, காவலர்கள் மணிபாரதி மற்றும் அமிர்தராஜ் இருவரும் அவர்களை அணுகினர்.
இரவு நேரத்தில் பொது இடத்தில் காரில் தனியாக அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்ததை அநாகரீகமான நடவடிக்கையாகக் கருதி அதற்காக அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்போவதாக மிரட்டி, 5,000 ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால், காவலர்களின் மிரட்டலுக்கு மசியாத அந்த தம்பதியினர் தங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று அவர்களிடம் கூறினர். பொதுவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டால் பாதிதிருமணம் முடிந்தது என்று அர்த்தம் – அப்படித்தான் தமிழ் சினிமாக்களில் காட்டுகிறார்கள். வீட்டுப் பெரியவர்கள் அப்படிச் சொல்வதே வழக்கம். ஆகவே, அவர்கள் தங்களைத் தம்பதிகளாகவே கருதுமாறு காவலர்களிடம் வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் சொன்னதைக் கேட்க விரும்பாத காவலர்கள் மேலும், மேலும் அவர்களை மிரட்ட முயலவே தம்பதியினர் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியதையடுத்து, டிஜிட்டல் பேமெண்ட் மூலம் ரூபாய். 4,000 ரூபாய் செலுத்துமாறு வற்புறுத்தி பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.
காவல்துறையின் இந்த மோசமான அணுகுமுறை தம்பதியினர் இருவரையும் மிகவும் கொந்தளித்துப் போகச் செய்தது.
அடாவடியில் ஈடுபட்ட காவலர்களால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்டவர்களில் இருவரில் ஒருவர், மணிமங்கலம் காவல் ஆய்வாளரிடம் இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்தார். விசாரணையில் நடந்த சம்பவம் உறுதியானதும், இரு காவலர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களால் அந்தப் பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என்பது குறித்தும் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.