உயிரின் மதிப்பு அறியாத தல - தளபதியின் ரசிகர்கள். 
தேசிய இளைஞர்கள் தினத்தில் பெரும் சோகம்.

உயிரின் மதிப்பு அறியாத தல - தளபதியின் ரசிகர்கள். தேசிய இளைஞர்கள் தினத்தில் பெரும் சோகம்.

டலிலும் உள்ளத்திலும் இளைஞர்களுக்கு வலிமையுடன் பேதமற்ற சமூக நல்லிணக்கமும் முக்கியம் என்பது போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி இளைஞர்களுக்கு சிறந்த முன் மாதிரியாக திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர். வாழ்ந்த சிறிது காலத்தில் இளைய தலைமுறையின் மீது அக்கறையுடன் பல நல்ல செய்திகளை கூறி வாழ்நாள் முழுக்க இளைஞர்களின் நலனுக்காக பாடுபட்டவர்.

விவேகானந்தரின் சேவைகளையும் இளைஞர்களுக்கு அவர் வழிகாட்டியாக விளங்கியதையும் நினைவு கூறும் வகையில்தான் 1984 ஆம் ஆண்டு இந்திய அரசு விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ஆம் தேதியை தேசிய இளைஞர் தினமாக அறிவித்து விவேகானந்தருக்கு பெருமை சேர்த்தது. அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் தேசிய இளைஞர்கள் தினமான இன்று என்ன நடந்து கொண்டுள்ளது?

        நாட்டுப்பற்று மிக்க 100 இளைஞர்களை தாருங்கள். இந்தியாவையே உயர்த்தி காட்டுகிறேன் என்ற விவேகானந்தர் தற்போது இருந்திருந்தால்... மனவேதனையுடன் இளைஞர்களின் மீது நம்பிக்கையை இழந்து வருந்தியிருப்பார் என்பதைத்தான் காட்டுகிறது இந்த இரு சம்பவங்கள்.

       பொங்கலை முன்னிட்டு இரு பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருவதை அறிவோம். இந்தப் படங்களை முதல் காட்சியிலேயே கண்டு ரசிக்க ஆர்வமாக ரசிகர்கள் டிக்கெட்டுக்காக எவ்வளவு செலவழிக்கவும் தயாராக இருந்தும் திரையரங்குகள் நிர்ணயித்ததை விட பல மடங்கு தந்து படத்தைப் பார்த்து மகிழ்கின்றனர். இதுவரை சரி. ஆனால் தங்களின் அபிமான நடிகருக்காக உயிரையும் இழப்பது என்பது எவ்விதத்தில் நியாயம்?

       சென்னையில் உள்ள ஒரு  தியேட்டரில் சிறப்புக் காட்சிக்காக  குவிந்த ரசிகர்களில்  சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் பரத்குமாரும் ஒருவர். 19 வயதே ஆன இவர் குடும்பத்தின் பொருளாதாரத்திற்காக  ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். படம் பார்க்க சென்றவர் உற்சாக மிகுதியால் தியேட்டர் வழியே சென்ற கண்டெய்னரின் மீது ஏறி நடனமாடியவர், இறங்கியபோது கீழே விழுந்து முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ மனையில் அனுமதிப்பப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவரது குடும்பம் இப்போது பொருளாதாரம் ஈட்டிய மகனை இழந்து செய்வதறியாது வேதனையில்.

        சேலத்தில் உள்ள ஒரு தியேட்டரில் இதே படத்தின் சிறப்புக்காட்சியைப் பார்க்க வந்த தாராமங்கலம் அருகே காட்டுப்பிள்ளை கோவில் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற வாலிபர் உற்சாகத்துடன்  தியேட்டரின் கதவு மீது ஏறி குதித்தபோது கீழே விழுந்து காலில் அடிபட்டதாக  கூறப்படுகிறது.

காவலர்கள் இவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது, அப்பா வேண்டாம் அம்மா வேண்டாம் தல மட்டும் வேண்டும் தல வாழ்க என கோஷமிட்டதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவலர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் சிறிது நேரத்தில் காலில் இருந்த கட்டைப் பிரித்துவிட்டு மீண்டும் அடுத்த காட்சியைக்காண அந்த இளைஞர் சென்று விட்டார் என்கிறார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களும் எதைக் குறிக்கிறது? இளைஞர்கள் மாய பிம்பமான சினிமாவின் மேல் கொண்டுள்ள அதீத மோகம், மதிப்பு மிகுந்த உயிருக்கே ஆபத்தாக முடிவதைக் கண்டு பொது மக்கள் பலரும் வேதனையுடன் இவர்களைக் பார்த்து கோபம் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? பாசத்துடன் வளர்த்த பெற்றோரை விட முக்கியமாகி விட்டனரா நடிகர்கள்? அப்படி என்ன அவர்கள் செய்து விட்டனர்?

      சினிமா என்பது நம்மை மகிழ்ச்சி கொள்ள வைக்கும் ஒரு சாதனம். அதில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் பொய்மையின் மேல் கட்டப்பட்ட போலி கதைகள். அதில் நடிப்பவர்களுக்கு அது ஒரு தொழில். அவ்வளவுதான். இதை ஏன் இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள மறுக்கின்றனர்? இதற்கு என்னதான் தீர்வு?

மது மற்றும் மனிதர் மீது அதிக போதையுடன் திரியும் மாணவ செல்வங்களை அப்(போ)பாதையிலிருந்து மடை மாற்ற வேண்டிய கடமை பெற்றோருக்கும், ஆசிரியருக் கும் மட்டுமே உள்ளது எனலாம்.

        மேலும், இளைஞர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்த விவேகானந்தரின் சிந்தனைகளை தங்களது மனதில் கொண்டு செயற்கரிய செயல்களை செய்பவர்களாக இன்றைய இளைஞர்கள் மாறினால் அல்லது மாற்றப்பட்டால்தான் இந்தியா சரித்திரத்தில் இடம் பெறும். என்கிறார்கள் சமூகஆர்வலர்களும் பொதுமக்களும். 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com