
மதுராந்தகம் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சித்திரவாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மகள் கிருத்திகா(12) கடந்த 5ம் தேதி வீட்டு முன்பு உள்ள சாலையில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, பழுதடைந்திருந்த தெருமின் விளக்கை மாற்றுவதற்காக, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் மின்கம்பத்தில் ஏறியதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே சேதமடைந்திருந்த மின்கம்பம் சாய்ந்து கீழே விழுந்ததில், மின் கம்பத்தின் அருகே சற்று தொலைவில் நின்றிருந்த சிறுமியின் மீது மின்கம்பம் உடைந்து விழுந்தது. இதில், பலத்த காயம் அடைந்த சிறுமி 14ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு கடந்த 15ம் தேதி சித்திரவாடி பகுதியில் உள்ள மயானத்தில் உடல் புதைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மயானத்தில் பூஜை பொருட்கள் மற்றும் தலைமுடிகள் இருந்ததால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், மதுராந்தகம் வட்டாட்சியர் ராஜேஷ் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார், சிறுமி புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி உடலை வெளியே எடுத்தனர்.
அப்போது, சிறுமியின் உடலில் தலை வெட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் தலையை வெட்டி எடுத்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.