பாம்போடு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெண்ணால் பரபரப்பு!

பாம்போடு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெண்ணால் பரபரப்பு!

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ளது வன்னி கோணேந்தல். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் - சமரச செல்வி தம்பதி. இவர்களுக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் உள்ளார். இந்த நிலையில், தாய் சமரச செல்வியும் அவரது மகளும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வருகை தந்தனர். அப்போது, அவர்கள் தங்களோடு கொண்டு வந்த பையில் சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட  இறந்த பாம்பு ஒன்றையும் கொண்டு வந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

இதைப் பற்றி அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களிடமிருந்து பாம்பை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமரச செல்வி, ’’தமிழக அரசின் பசுமை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இலவச வீட்டுக்கு பல ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு வருகிறோம். எவ்வளவு போராடியும் மின் இணைப்பு கிடைக்கவே இல்லை. மின் இணைப்பு இல்லாததால் அடிக்கடி பாம்புகள் சர்வ சாதாரணமாக எங்கள் வீட்டுக்குள் நுழைந்து விடுகின்றன. இதனால் எங்களது உயிருக்கே ஆபத்தாக உள்ளது.

அதோடு, மின் இணைப்பு இல்லாததால் எனது மகளும் நன்றாகப் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில், நேற்று எங்கள் வீட்டில் புகுந்த இந்தப் பாம்பை அடித்துக் கொன்று, அதை ஆட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு வந்து காட்டி, மின் இணைப்பு கேட்டு மனு கொடுக்க வந்திருக்கிறோம்” என்று அவர் கூறினார். பாம்போடு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த தாய், மகளால் கலெக்டர் அலுவலகமே சற்று நேரம் பரபரப்போடு காணப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com