மூன்றாவது அணி ஆபத்து - திருமாவளவன் பளீச்

மூன்றாவது அணி ஆபத்து - திருமாவளவன் பளீச்

"2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இப்போதே அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அதற்காக முன்னேற்பாடுகளையும் செய்யத் தொடங்கியுள்ளன. இச்சூழலில் “மூன்றாவது அணி என்பது மிகவும் ஆபத்தான விஷயம்," என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்: 

இலங்கை முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டது. இன்னும் அங்கு உள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. சிங்கள மதமும், பௌத்த மதமும் அங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காணாமல் போன தமிழ் மக்களின் நிலை என்ன என்பதை அங்குள்ள ஆட்சியாளர்கள் இன்று வரை தெளிவுபடுத்தவில்லை.

 உலகம் முழுதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஐநா சபையில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றத்துடன் இருக்கிறது. இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது, ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார். தமிழ் மக்களுக்கு நல்லது நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். எதுவும் நடக்கவில்லை.

 மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இலங்கை தமிழ் மக்கள் மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது என்ன நடந்ததோ, அதே நிலைதான் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

 இலங்கையில் 13-வது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை விடுதலை சிறுத்தை கட்சி ஆதரிக்கிறது. இந்தியாவில் சனாதன சக்திகள் ஒரே தேசம் ஒரே கட்சி என்ற அரசியலை முன்னெடுத்து செல்கிறார்களோ, அதே போன்று சிங்களவர்களும் ஒரே தேசம் ஒரே மதம் ஒரே கலாச்சாரம் என்கிற அடிப்படையில் கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

 ஒரே தேசம் ஒரே மதம் என்கிற சிங்களவர்களின் மேலாதிக்க போக்கு தான் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவுக்கு முழு காரணம். சிங்கள அரசின் பேரினவாத போக்கிற்கு ஆதரவாக செயல்படுவதை இந்திய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் 13 ஆவது அரசியல் சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த இலங்கையை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு காண தேவைப்பட்டால் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது என்பது மிகவும் ஆபத்தான விஷயம். சனாதன சக்திகள் மீண்டும் தலைவிரித்தாட வழிவகை செய்துவிடும். காங்கிரஸா, பாஜகவா என்று பார்க்காமல் “ஈழத் தமிழர்களின் நலன் காக்க இந்திய அரசு’ என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

இவ்வாறு தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com