நாம் தமிழர் கட்சியில் இணைய என்னை சந்தித்தார் திருமகன் ஈவெரா... - சீமான் பரபரப்புப் பேச்சு

நாம் தமிழர் கட்சியில் இணைய என்னை சந்தித்தார் திருமகன் ஈவெரா... - சீமான் பரபரப்புப் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மாற்றுக் கட்சியனைரை கூட தனது பேச்சுக்கு ரசிகராக மாற்றிவிடும் திறன் பெற்றவர். சமூகவலைதளங்களின் டிரெண்டுக்கு ஏற்ப தனது பேச்சை வடிவமைத்து கொண்ட பேச்சாளர்களில்  சீமான் முக்கியமானவர். பேச்சுக்கள் வாக்குகளாக மாறுகிறதோ இல்லையோ கைதட்டல்களாக நிச்சயம் மாறும்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி (4.01.2023) மாரடைப்பால் காலமானார். அதனால் அத்தொகுதிக்கு அடுத்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் அங்கு போட்டி இடும் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவவீதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதனால் சீமான் அங்கு தனது பிரச்சார பணிகளை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஈவெரா திருமகன் “நாம் தமிழர்” கட்சியில் இணைய என்னை சந்தித்தார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய சீமான்,

“தம்பி ஈவெரா திருமகனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். திருமகன் முதலில் நமது கட்சியில்தான் இணைவதற்கு வந்தார். பின்னர் அவரது தந்தை என்ன சொன்னார் என்று தெரியவில்லை. தம்பி நம்ப கட்சிக்கு வரவில்லை. நானும் நீ அங்கேயே இருந்துவிடு என்று கூறிவிட்டேன்.

அதன் பின் திருமகன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இங்கே போட்டி இட்டு வெற்றி பெற்று ஒன்றரை ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் இருந்தார்.

மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எதாவது பேசியதை பார்த்ததுண்டா? அய்யா (இளங்கோவன்) போனாலும் பேசமாட்டார். எனவே மக்களின் பிரச்சனைகளை துணிந்து தெளிந்து பேசக்கூடிய ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என்று சீமான் பேசினார்.

சீமானின் பேச்சு சிரிக்க வைத்தாலும் சில நேரங்களில் கற்பனை எல்லையை தாண்டுகிறதோ என்று யோசிக்கவும் செய்யும். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடனான சந்திப்பு தொடங்கி, பல்வேறு ஆளுமைகள் குறித்தும் அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுடனான சந்திப்பு பற்றி சீமான் பேசி சர்ச்சையைக் கிளப்புவார்.

இறந்து போனவர்கள் குறித்து சீமான் பேசுவது சமூகவலைதளங்களில் தொடர்ந்து எள்ளி நகையாடப்பட்டு வந்துள்ளன. மீம் கிரியேட்டர்கள், ட்ரோல் வீடியோ உருவாக்குபவர்கள், நெட்டிசன்கள் இது தொடர்பாக பல பதிவுகளை பதிவிட்டுள்ளனர்.

இது பற்றி காங்கிரஸ் வட்டாரத்தில் பேசினோம்.

“இது உண்மையா என்று விசாரிக்க திருமகன் இன்று இல்லை. ஒருவேளை இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் ஏன் திருமகன் உயிரோடு இருந்த போது சீமான் இதை பொது வெளியில் கூறவில்லை? 2021 தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட போது சீமான் ஏன் இதை பற்றி பேசவில்லை?

 அதை சொல்லி அப்போதே அவரது வேட்பாளருக்கு வாக்கு சேகரித்திருக்கலாமே? அப்போது சீமான் கூறியிருந்தால் திருமகன் மறுத்து சொல்லியிருப்பார். இதனால் இறந்த பின்னர் தனது கதைகளை அவிழ்த்து விடுகிறார். யாருடைய இறப்பையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சீமானின் செயல் கண்டிக்கத்தக்கது” என்று காங்கிரஸார் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com