டி.என்.பி.எஸ்.சி தேர்வு குளறுபடிகள் - பகீர் பின்னணி; உருவாகிறதா, வியாபம் 2.0?

டி.என்.பி.எஸ்.சி தேர்வு குளறுபடிகள் - பகீர் பின்னணி; உருவாகிறதா, வியாபம் 2.0?

டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வில் நடந்த குளறுபடிகள், மாநிலமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தேர்வுகளை மறுபடியும் நடத்த வேண்டும் என்று பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

கடந்த ஒரு வாரமாகவே போட்டித் தேர்வில் நடந்த குளறுபடிகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் இடம் பெற்று வருகின்றன. போட்டித் தேர்வுக்கு பயிற்சியளிக்கும் தனியார் மையங்கள், தங்களுடைய மையங்களிலிருந்து நிறைய பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விளம்பரம் அளித்தது பல சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது.

இந்நிலையில் இன்று கூடிய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். டி.என்.பி.எஸ்.சியில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்று வருவது வருந்தத்தக்கது. இத்தகைய முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

தேர்வு குளறுபடிகள், முறைகேடுகள் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று பேசிய நிதியமைச்சர், தென்காசி மாவட்டத்தில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக தவறாக வந்த விளம்பரத்தால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சம்பந்தப்பட்ட பயிற்சி மையம், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பயிற்சி மையங்களை வைத்திருப்பதால் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றார்.

இது தொடர்பாக மனித வள மேலாண்மைத்துறை செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டிருப்பதாகவும், காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி குறித்து தேர்வு மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என்பதையும் துறை ரீதியாக ஆய்வு செய்யுமாறு டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய ஊழல், வியாபம். ஆள் மாறாட்டம், கேள்வித்தாள் மோசடி, முடிவுகளை மாற்றி அறிவித்தது என மோசடிகள் ஒருபக்கம். போட்டியில் தேர்வானவர்கள் அடுத்தடுத்து மர்ம மரணம் அடைந்தது என இன்று வரை வியாபம் வட இந்தியாவில் பரபரப்பாக பேசப்படும் ஊழல்களில் ஒன்று.

இதுவரை வியாபம் ஊழல் சம்பந்தமாக 30க்கும் அதிகமானவர்கள் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றிருக்கிறார்கள். ஏராளமானவர்கள் இன்னும் வழக்கு விசாரணையை எதிர்நோக்கியிருக்கிறார்கள். இதில் காவல்துறை

அதிகாரிகள் முதல் மருத்தவர்கள் வரை சமூகத்தின் பலதரப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாத அண்டை மாநிலங்களான உத்திரப்பிரதேசம், பீகார், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் வியாபம் ஊழல் நடந்திருப்பதாக வட இந்தியா ஊடகங்களில் ஏகப்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தன. தனித்தனி புகார்களாக விசாரிக்கப்பட்டதால் சர்ச்சைக்கு இன்று வரை ஒரு முடிவில்லை.

பா.ஜ.க, காங்கிரஸ் என எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் வியாபம் ஊழலில் ஆட்சியாளர்களுக்கு தொடர்பு இருந்தாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது போன்ற வியாபம் ஊழல், தென்னிந்திய மாநிலங்களில் இதுவரை பேசப்பட்டதில்லை. சமீபத்தில் டி.என்.பி.எஸ். சி தொடர்பாக இருந்து வரும் சர்ச்சைகளை பார்க்கும்போது, தமிழ்நாட்டிலும் வியாபம் மோசடியின் தடங்கள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தாக வேண்டியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com