பண நோட்டுகளால் ஆசி பெற்ற திருநங்கைகள்!
இராமநாதபுரம், குமரய்யாகோயிலில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மும்தாஜ் என்ற திருநங்கையின் தலைமையில், பெரிய வீடு பால் ஊற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திருநங்கையாக மாறிய மூன்று பெண்களை வாழ்த்தும் விழா கொண்டாடப்பட்டது. இதில் மூன்று திருநங்கைகளுக்கும், மணப்பெண் கோலத்தில் அலங்காரம் செய்து சடங்கு வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவுக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு தங்கள் மாவட்டத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பணத்தை மொய் செய்தனர். இதில் மணப்பெண் கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட மூன்று திருநங்கைகளுக்கு பண மழையை பொழிந்தனர். இதில் இந்த விழாவைக் காண வந்திருந்த ஏரளமான பார்வையாளர்கள் இதைக் கண்டு பரவசமடைந்தனர். அதையடுத்து அந்த விழாவில் சிறப்பு உணவுகள் பரிமாறப்பட்டன. தொடர்ந்து குத்தாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
புதிதாக திருநங்கைகளாக மாறுபவர்களுக்கு இதுபோன்ற சிறப்பு பால் ஊற்றும் விழா சடங்கு எடுப்பது திருநங்கைகளின் வழக்கமாம். திருநங்கைகள் ஒன்று கூடி, மேள தாளங்கள் முழங்க, மூன்று திருநங்கைகளுக்கு மணக்கோல ஆடை, ஆபரணங்கள் உடுத்தி விழா எடுத்திருப்பது அவர்களுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய திருநங்கைகளை சந்தோஷப்படுத்த கட்டுக்கட்டாக பணம் வைத்து ஆசீர்வாதம் செய்த நிகழ்வு, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்தது வந்த திருநங்கைகள் ஒரே இடத்தில் இந்த விழாவில் கலந்து கொண்டது அவர்களின் ஒற்றுமையைக் காட்டியது.