திண்டுக்கல் அருகே இரு பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி - தொடரும் ஜாதிக்கொடுமை!

திண்டுக்கல் அருகே இரு பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி - தொடரும் ஜாதிக்கொடுமை!

வேங்கை வயல் சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்கள் பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றன. சமூக நீதியை எப்போதும் பேசி வரும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

சேலம் மாவட்டத்தில் கோவிலுக்குள் நுழைந்ததற்காக ஆளுங்கட்சி பிரமுகரால் ஒரு தலித் இளைஞர் கண்டிக்கப்பட்டதும், கள்ளக்குறிச்சி மாவட்டதில் தலித் இளைஞர்கள் மஞ்சள் நிற சட்டைகளை வணங்க வேண்டும் நிர்பந்தித்தாகவும் பல்வேறு சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

இந்நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் ஜாதிப் பெயரை சொல்லி திட்டியதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது. திண்டுக்கல் அருகே தொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் சின்னாளப்பட்டி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

சம்பந்தப்பட்ட இரு மாணவிகளையும் வகுப்பு ஆசிரியை ஜாதிப் பெயரை சொல்லித் திட்டியதாகவும், பிற மாணவர்கள் இரு பெண்களிடமும் எந்தவித பேச்சும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மிரட்டியதாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதனால் மனமுடைந்த இரண்டு மாணவிகளும் பள்ளி வளாகத்தில் இருந்த கழிப்பறையில் சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். இரண்டு மாணவிகளையும் மீட்ட பள்ளி நிர்வாகம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தது.

விஷயத்தை கேள்விப்பட்டதும் தொப்பம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள், சின்னாளப்பட்டி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் இறங்கினார்கள்.

இது தொடர்பாக குறிப்பிட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியை பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. பள்ளி வளாகத்திலேயே நடந்த சம்பவம் என்பதால் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை கிளப்பியிருக்கிறது.

இடைத்தேர்தல் நேரம் என்பதால் தோழமை சுட்டலுக்குக் கூட தயங்கி, தலித் தலைவர்கள் கனத்த மௌனம் சாதிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com