ஜெயலலிதாவின் மாடலை நாங்களும் பின்பற்றுகிறோம் - நிதியமைச்சர் பி.டி.ஆர்

ஜெயலலிதாவின் மாடலை நாங்களும் பின்பற்றுகிறோம் - நிதியமைச்சர் பி.டி.ஆர்

தமிழ்நாட்டின் நிதி நிலை 2011, 2022 போன்று வரும் புத்தாண்டிலும் சிறப்பாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். புத்தாண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த நிதியமைச்சர், இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்திருக்கிறார். அப்போது தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலை குறித்தும், புதிய திட்டமிடல் குறித்தும் பேசினார்.

முன்னதாக, 3500 கோப்புகள், நூற்றுக்கணக்கான ஆய்வுக்கூட்டடங்கள், ஆறு மாநிலங்களில் உரைகள், ஏராளமான சுற்றுப்பயணங்களை நடப்பாண்டில் தான் மேற்கொண்டதாகவும் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இன்றைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் அது குறித்து விரிவாகவே பேசியிருந்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழக அரசியல் ஆளுமைகளான ஜெயலலிதாவும் கருணாநிதியும் முன்னெடுத்த முயற்சிகள் குறிப்பாக தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த கொண்டு வந்த திட்டங்கள், அவற்றின் பயன்கள் பற்றியும் குறிப்பிட்டவர், பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய விஷன் 2023 நல்ல திட்டம் என்று பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.

2012ல் ஜெயலலிதா அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விஷன் 2023, ஒரு தொலை நோக்குத் திட்டம். 2021 ஆட்சிக்கு வரும் வரை தி.மு.க அதை விமர்சனம் செய்து வந்தது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், 15 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முக்கியமான கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதால் விஷன் 2023 ஆரம்பிக்கப்பட்டது.

விஷன் 2023 இலக்கின்படி மாநிலத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் இரண்டு இலக்க அளவிலும், தேசிய சராசரி வளர்ச்சியை விட இரண்டு சதவீதம் கூடுதலாகவும் இருக்க வேண்டும். அதன் மூலம் மாநிலத்தின் தனி நபர் வருமானத்தை 2023-ம் ஆண்டிற்குள் உயர் நடுத்தர வருவாய் நாடுகளின் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் திட்டம்.

ஜெயலலிதாவின் மாடலை நாங்களும் பின்பற்றுகிறோம். 2003 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் சிறப்பான முறையில் முன்னேறியது. ஜெயலலிதா பதவிக்கு வந்த முதல் மூன்று ஆண்டுகள் சிறப்பான பொருளாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் சிறைக்கு சென்றுவிட்டு திரும்பியதும் தொய்வு ஏற்பட்டுவிட்டது.

வரவு செலவு கணக்கு என்பது வேறு. முதலீடு கணக்கு என்பது வேறு. செயல் திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிஜமான வளர்ச்சி என்பது, உற்பத்தியில் எத்தனை சதவீதம் பெறப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும். 2003ல் 28 சதவீதம் இருந்த வளர்ச்சி, படிப்படியாக குறைந்துவிட்டது. கடந்த 11 ஆண்டுகளில் வளர்ச்சியானது 17 சதவீதம் குறைந்திருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் முதல் ஆண்டில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தோம்.

நிதியமைச்சராக அனைத்துத் துறையை சேர்ந்த செயலாளர்களையும் அழைத்து ஆய்வுக்குகூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். திட்டமிட்டபடி செலவு செய்ய முடிந்தது குறித்து ஆய்வு செய்திருக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டியிருக்கிறது.

கொரானாவுக்கு முன்னர் தமிழ்நாட்டின் முதலீடு 30 ஆயிரம் கோடியை தாண்டியதில்லை. நடப்பாண்டில் 44 ஆயிரம் கோடி முதலீடு என்றொரு கடினமான இலக்கை நிர்ணயித்திருக்கிறோம். 100 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட திட்டங்களை ஆய்வு செய்திருக்கிறோம். கடந்த எட்டு மாதங்களின் பொருளாதார நிலையோடு ஒப்பிட்டு பார்க்கும்போது தற்போதைய நிதி நிலைமை திருப்தியளிக்கிறது. நாங்கள் நினைத்த இலக்கை அடைந்துவிடுவோம் என்று நம்பிக்கையோடு பேசியிருககிறார்.

நிதியமைச்சரின் நம்பிக்கை, பட்ஜெட்டில் எதிரொலிக்குமா? காத்திருப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com